6

மூன்றாம் பதிப்பின் முகவுரை


"சந்தனப் பொதியிற் றடவரைச் செந்தமிழ்ப்
பரமா சாரியன் பதங்கள்
சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே"

     தமிழில் இப்பொழுது கிடைக்கும் இலக்கிய நூல்களுள்ளே மிகப்
பழையன எட்டுத்தொகை நூல்கள். கடைச்சங்கமருவிய நூல்களை, 'பாட்டு',
'தொகை', 'கீழ்க்கணக்கு', என்று மூன்று தொகுதிகளாக வகுத்துரைப்பர்
உரையாசிரியர்கள். அவற்றுள் நடுநாயகமான எட்டுத்தொகை நூல்களின்
பெயர்களை,

     "நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூறு.............தொகை" என்னும்
பழைய வெண்பாவால் அறியலாம். அந்த நூல் வரிசையிலே நான்காவதாக
உள்ளது பதிற்றுப்பத்து என்னும் இத்தொகை நூல்.

     பத்துப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகள் சேர்ந்து
அமைந்தமையின் பதிற்றுப்பத்து என்னும் பெயர் இதற்கு வந்தது.
'பதிற்றுப்பத்தென்பது இற்றுச்சாரியை வந்தது' (எழுத்து. .22, உரை) என்று இத்
தொடருக்கு இலக்கணம் கூறுவர் நேமிநாத உரையாசிரியர். ஆசிரியப்பாவினால்
புறப்பொருள் பற்றிய செய்யுட்கள் நூறு அமைந்தனவாயினும் ஒவ்வொரு
பத்தும் தனித்தனியே ஒவ்வொரு புலவராற் பாடப்பெற்று ஒவ்வொரு சேர
அரசரைப் பாராட்டுவதனால் இந்நூல் பத்து வேறு பகுதியாகியது.
வெவ்வேறாகிய பத்துவகை யாப்பினால் அமைந்த ஒருவகை அந்தாதியைப்
பதிற்றுப்பத்தந்தாதி
யென்று வழங்கும் பிற்கால வழக்கு இங்கே
நினைத்தற்குரியது. இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார்
இன்னாரென்பது இப்போது விளங்கவில்லை. மற்றத்தொகை நூல்களுள்
புறநானூற்றைப் போல இது புறத்துறையமைதியையும்
துறைக்குறிப்பையும்உடையது. ஆயினும் இதற்கென்று தனியே அமைந்த
இயல்புகள் சில. அவை வருமாறு:-

     (1) இந்நூல் முழுவதும் சேர அரசர்களைப் பாராட்டுவது. அவ்வரசர்களிற்
சிலரைப் பற்றிய செய்யுட்களும் செய்திகளும் வேறு தொகை நூல்களில்
வரினும் குறிப்பிட்ட ஓர் அரசரைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பத்துச்
செய்யுட்கள் இதிலேதான் காணப்படுகின்றன.

     (2) இவற்றைப்பாடிய புலவர்கள் பதின்மர்; ஐங்குறுநூற்றில் ஐந்து
புலவர்கள் தனித்தனியே ஒவ்வொரு திணைபற்றி நூறு நூறு செய்யுட்களைப் பாடியது போல இதில் ஒவ்வொரு சேரரையும் பற்றிப் பப்பத்துப் பாடல்களைப்
பதின்மர் பாடியுள்ளனர்.