பக்கம் எண் :

61

     37. கருங்கண் - 1கொடியகண். வழங்குதல்-ஆடுதல்.

     உரவோரும்பல் (11), தோன்றல் (16), குட்டுவ (27), நீ சீறினையாதலின், நாடுகெழு தண்பணை (31) அளிய தாம் பெரும்பாழாகும் (38) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     சீறினையாதலின், நாடுகெழு தண்பணை பாழாகுமென 2எடுத்துச்
செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.

     'உளைப்பொலிந்த மா' (17) என்பது முதலாய நாலடியும் 'கடிமிளை' (24)
என்பது முதலாய இரண்டடியும் வஞ்சியபடியால் வந்தமையால் வஞ்சித்
தூக்குமாயிற்று.

     20. 'புகல்' என அடியிடையும், 'ஒடு' என அடியின் இறுதியும் வந்தன
கூன்.

     (கு - ரை) 1 - 5 செங்கோல் செலுத்தும் அரசருக்கு வேண்டப்படாத
குற்றங்கள் கூறப்படும்.

     சினன் - கோபம்; ஏ : எண்ணேகாரம். இதனைக் காம முதலிய
வற்றோடும் கூட்டுக. கழி கண்ணோட்டம் - அளவிறந்து ஒருவரை உவத்தல்;
இதனை, "மாணா உவகை" என்றும் "அளவிறந்த உவகை" என்றும் கூறுவர்
(குறள், 432, பரிமேல்.); "பிணைந்த பேரருள்" (சீவக. 198) என்றவிடத்து
நச்சினார்க்கினியர், 'கழிகண்ணோட்டம்' என்று உரை கூறினார்.

     2. அச்சம் - பகைவர்க்கு அஞ்சுதல். அன்புமிக
உடைமை-பொருளிடத்தே அளவுக்கு மிஞ்சிய பற்று உடையோனாதல்; இஃது
உலோபம் என்னும் குற்றத்தின்பாற்படும்.

     3. தெறல் கடுமை - அளவுக்கு மிஞ்சிய தண்டனை; "கையிகந்த
தண்டம்" (குறள். 567). பிற என்றது மதம், மானம் முதலியவற்றை.

     1-3. இங்கே கூறிய குற்றங்களையும், "செருக்குஞ் சினமுஞ் சிறுமையு
மில்லார், பெருக்கம் பெருமித நீர்த்து" "இவறலு மாண் பிறந்த மானமு மாணா,
உவகையு மேத மிறைக்கு" (குறள். 431 - 2) என்பவற்றிற்கூறிய
குற்றங்களையும் ஒப்பு நோக்குக.

     4. அறந்தெரிதிகிரி-தருமத்தையே தெரிந்துசெலுத்தும் ஆக்ஞாசக்கரம்;
தரும சக்கரமென்பர். தெரிதலைக் கூறினும் தெரிந்து செலுத்தலையே கொள்க.
வழியடை-தடை; 'குன்றம் உருண்டால் குன்று வழியடையாகாதவாறு போலவும்,
(இறை. 3, உரை).

     3-5. பிறவுமாகிய தீது என்க. கேண் இகந்து - சேய்மையிலே விட்டு
நீங்க; இகந்து: எச்சத் திரிபு.

     1-5. அறந்தரு திகிரிக்கு வாயடையாகுமென்று பாடம் கொண்டு
இவற்றைப் பரிமேலழகர் மேற்கோள் காட்டினர். (குறள். 432)

     6. கடல்-நெய்தல் நிலம். கானம் - காடு; முல்லை நிலம். கடலுங்
கானமும் கூறினராயினும் உபலட்சணத்தால் அவற்றின் இனமாகிய குறிஞ்சியும்
மருதமும் உடன் கொள்க.

     7-9. குடிமக்கள் செயல். பிறரை நலியாமலும், பிறர் பொருளை


     1செங்கண்ணையுடைய பேயாதலின் கரிய கண் என்னாது கொடியகண்
என்றார்.

     2எடுத்துச் செலவு - போர்புரிதற்கு மேற்செல்லுதல்.