(3) ஒவ்வொரு
பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர்
என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புக்கள் அமைந்துள்ளன. துறையின் பெயர்
பிறநூல்களிலும் இருப்பினும் மற்றவை பிற தொகை நூல்களிற்
காணப்படவில்லை.
(4) ஒவ்வொரு
பாட்டிலும் பொருளாற் சிறப்புடைய தொடர் ஒன்றே
அவ்வப்பாட்டின் பெயராக இருக்கிறது. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய
மலைபடுகடாம் என்னும் பெயர் இங்ஙனமே வந்தமை காண்க.
(5) இதில் உள்ள
நாலாம் பத்துச் செய்யுட்கள் அந்தாதியாக
அமைந்துள்ளன.
(6) ஒவ்வொரு
பத்தின் இறுதியிலும் அப்பத்தின் பாட்டுடைத்
தலைவனுடைய பெயரும் செயல்களும் அவனைப் பாடினார் பெயரும் பத்துச்
செய்யுட்களின் பெயர்களும் பாடிய புலவர் பெற்ற பரிசிலும் சேர அரசர்
ஆண்ட கால அளவும் ஒவ்வொரு பதிகத்தாலும் தெரிகின்றன. அப்பதிகங்கள்
ஆசிரியப்பாவாகத் தொடங்கிக் கட்டுரை நடையாக முடிகின்றன.
சாஸனங்களிற் காணப்படும் மெய்க்கீர்த்திகளைப் போன்றனவாக அவற்றைக்
கொள்ள வேண்டும்.
கிடைத்த இந்நூற்
கையெழுத்துப் பிரதி ஒன்றிலேனும் கடவுள்
வாழ்த்தும் முதற்பத்தும் பத்தாம்பத்தும் அவற்றின் உரையும் காணப்படவில்லை.
காணப்பட்ட எட்டுப்பத்துக்களுள் இரண்டாம்பத்து இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனாரும், மூன்றாம் பத்து இமயவரம்பன்
தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனாரும்,
நாலாம்பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக்
காப்பியனாரும், ஐந்தாம்பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப்
பரணரும், ஆறாம்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார்
நச்செள்ளையாரும், ஏழாம்பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலரும்,
எட்டாம்பத்து தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையை அரிசில்கிழாரும்,
ஒன்பதாம்பத்து குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையைப் பெருங்குன்றூர்
கிழாரும் பாடியவை.
முதற் பத்தையோ
பத்தாம் பத்தையோ சார்ந்த இந்நூற் பாடல்களிற்
சில தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரிய வந்தன.
இந்நூலின் உரை
பழமையானதென்றே தோற்றுகின்றது. உரையாசிரியர்
இன்னாரென்றோ இன்னகாலத்தவரென்றோ தெரிந்து கொள்ள இயலவில்லை.
76-ஆம் பாட்டின் உரையில், 'சின்மையைச் சின்னூலென்றது போல ஈண்டுச்
சிறுமையாகக் கொள்க' என்று இவர் எழுதியுள்ளார். சின்னூலென்பது
குணவீரபண்டிதரால் இயற்றப் பெற்ற நேமிநாதத்துக்குப் பெயராக
|