பக்கம் எண் :

72

     'நின்படைஞர்' (4) எனவும் 'நீ' (5) எனவும் அடிமுதற்கட் சீரும்
அசையும் கூனாய் வந்தன.

     (கு - ரை) 1. நின் படையிலுள்ள குதிரைகள் சென்ற பகைவருடைய
வயல்களில் கலப்பைகள் உழா.

     2-3. மதத்தைத் தலையிலேயுடைய வன்கண்மையையுடைய
யானைப்படை பரந்துசென்ற வயல்கள் வளம்பரவுதலை அறியா. கடாச்
சென்னியவென்பது மெலிந்தது. கடாஅஞ் சென்னிய யானை: "கமழ் கடாஅத்,
தளறு பட்டநறுஞ்சென்னிய. . . வினைநவின்ற பேர்யானை" (மதுரைக். 44 - 7)

     4. படைஞர் - போர்வீரர். மன்றம் - பொதுவிடம். கழுதை போகி -
கழுதைகள் செல்ல; பகைவர் நாட்டு ஊர்களிற் கழுதைகளைக் கொண்டு
உழுவித்தல் மரபாதலின் இங்ஙனம் கூறினார்; "வெள்வாய்க் கழுதைப்
புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்" (புறநா.
15 : 2 - 3) என்பதையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.

     5. உடன்றோர் - போர்செய்த பகையரசரது. எயில்களில் மக்கள்
இன்மையின் காவல்கள் வைக்கப்படா.

     6. கடியென்னும் உரிச்சொல் மிகுதிப் பொருளில் வந்தது (தொல். உரி.
87, தெய்வச்.) 7. அழலாடுதல்: பதிற். 15 : 7.

     6-7. மிகுதியான காற்று அடித்தலால் சுவாலை மிக்குக் கோபித்துப்
பசிய பிசிரையுடைய ஒள்ளிய நெருப்பு வழங்கிய இடங்களையும்.

     8. ஆண்டலை யென்னும் புள் வழங்குகின்ற, மரங்களடர்ந்த காடு
தீந்து போன கடியவழிகளையும் உடைய. ஆண்டலை - ஆண்மகன் தலை
போன்ற தலையையும் புள்ளினைப் போன்ற உடலையுமுடையதொரு பறவை.
இது பாலைக்குரியது.

     9. ஆறலைப்பவர் போர்செய்யும் இடங்கள் அகன்ற பெரிய பாழ்
வெளிகளாக நிலைபெற்றன.

     10. இடியை ஒத்து ஒலிக்கும் வெற்றி முரசோடு.

     10-11. பெரியமலையின் பக்கத்தினின்றும் 'ஒழுகும் அருவியைக்
போல விளங்குகின்ற கொடி அசைய. கொடிக்கு அருவி: மதுரைக் 373 - 4,
குறிப்பிரை.

     12. விரைவாகிய செலவையுடைய பறைவையை ஒப்ப. பரி - செலவு
கதழ் - விரையும். சிறகு - பறவை; ஆகுபெயர். மலர்த்த வென்னும்
பொருளையுடைய அகைப்பவென்னும் சொல் இங்கே உவமவாசகமாக நின்றது.

     13. பிறரென்றது பகைவரை. 12-3. குறுந். 203 : 2 - 3. நாடு (13)
பாழாக மன்னிய (9)

     மு. இது புலவன் பொருள் நச்சிக் கூறலிற் பாடாண் கொற்றவள்ளை
(தொல். புறத். 34, ந.).

     (பி - ம்) 12. சிறைகைப்ப. (5)