பக்கம் எண் :

76

     உழவர்மகளிர் அதனைக் கடியவேண்டித் தெள்விளியிசைப்பின், 1இயவர்
இயங்களின் ஒலிகேட்ட பழக்கத்தானே தன்னைக் கடிகின்ற ஒலியையும்
அவற்றின் ஒலியாகக் கருதி மயில் ஆலுமென்றவாறு.

     10. நெய்தல் மரபின் நிரை கட் செறுவென்றது நெய்தல் இடையறாது
பூக்கும் மரபினையும் நிரைத்த வண்டினையுமுடைய செறுவென்றவாறு.
2கள்ளென்பது வண்டு.

     வல்வாயுருளி (11) அள்ளற்பட்டு (12) மண்ட (11) எனக் கூட்டுக.

     12. துள்ளுபுதுரப்பவென்றது சாகாட்டாளர் துள்ளித் துரக்கையாலே
யென்றவாறு.

     13. அளறுபோகு விழுமமென்றது அளற்றைக் கழியப் போகின்ற
காலத்து வருத்தமென்றவாறு.

     நன்னாட்டுக் (15) கவின் (16) நீ சிவந்தனை நோக்கலின் சிதைந்தது (1)
என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. நீ சிவந்தனை நோக்கலின் - நீ கோபித்துப்
பார்த்தலினால். மன்ற சிதைந்தது - நிச்சயமாக அழிந்தது; மன்ற : தேற்றப்
பொருளில் வந்த இடைச்சொல்.

     2. இடையறாது மலருங் குவளையின் தூய புறவிதழொடித்த மலரைக்
கூந்தலிற் செருகி. முழுநெறி - புறவிதழொடித்த முழுப்பூ; "தீநீர்ப் பெருங்
குண்டு சுனைப்பூத்த குவளைக், கூம்பவிழ் முழுநெறி" (புறநா. 116 : 1 - 2).
அதனை மகளிர் கூந்தலிலே செருகுதல் வழக்கம்; "குவளைத், தேம்பா
யொண்பூ நறும்பல வடைச்சிய, கூந்தல்" (அகநா. 308 : 11 - 3)

     3. மலர்ந்த ஆம்பற்பூவின் அகவிதழால் அமைத்த தழையை
அணிந்தவராகி; மடிவை - தழையென்னும் ஆடை; "அகலு ளாங்க ணம்பகை
மடிவைக் குறுந்தொடி மகளிர்" (அகநாத. 226 : 3 - 4) என்ற விடத்து
'இப்பாட்டினுள் மடிவையென்றது தழையை' என ஒரு பழங்குறிப்பு உள்ளது.
இங்கே 'ஆம்ப லம்பகை மடிவையர்' என்ற பாடம் இருப்பின் ஓசையும்
பொருளும் சிறக்கும். அம்பகை மடிவையரென்பதற்கு ஒன்றற்கொன்று மாறாகத்
தொடுத்த அழகிய தழையாடையை யுடையாரெனப் பொருள் கொள்க;
"அயவெள் ளாம்ப லம்பகை நெறித்தழை, தித்திக் குறங்கி னூழ்மாறலைப்ப,
வருமே சேயிழை' (குறுந். 203 : 5 - 7) என்பதையும் அதன் உரை
முதலியவற்றையும் பார்க்க.

     4-5 சுழிந்த மயிரையுடைய தலையையும் பூவாற் செய்த கண்ணியையும்
கள்ளாகிய உணவையும் உடையராகிச் சுருதியோடு இனிதே கூடுகின்ற
வாத்தியத்தையுடையோர்; இவர் உழவர்.

     5-7. இயவரையுடைய துறையென்க. நீர்த்துறைக்கு அணித்தாக உள்ள
மருதமரத்தில் ஏறி; ஏறியவை மயில்கள். மயில்களை ஓட்டும் பொருட்டு


     1"தெருவி னார்ப்புறும் பல்லியந் தேர்மயில்" (கம்ப. ஆறுசெல். 42)

     2"கள்ளின மார்த்துண்ணும்" (திருச்சிற். 295) என்பதன் உரையில்,
'கள்ளென்பது வண்டினுள் ஒரு சாதி யென்பாரும் உளர்' என்று
பேராசிரியர்
எழுதியது இங்கே கருதற்குரியது. தேனென்பது வண்டுக்கும் தேனுக்கும்
ஆதல்போல இதனையும் கொள்க.