பக்கம் எண் :

78

  செந்நீர்ப் பூச லல்லது
வெம்மை யரிது நின் னகன்றலை நாடே.

     துறை - நாடுவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
உருத்துவரு மலிர்நிறை (12)

     (ப - ரை) 3. கறையடியென்றது குருதிக்கறையினையுடைய அடி
யென்றவாறு.

     4-5. மறவர் கதழ் தொடை மறப்ப இளை இனிது தந்தென்றது நின்வீரர்
போரில்லாமையால் விரைந்து அம்புதொடுத்தலை மறக்கும்படி நாடு காவலை
இனிதாகத் தந்தென்றவாறு.

     இளை - காவல். விளைவில் முட்டுறாமலெனத் திரிக்க.

     6. புலம்பா உறையுட்டொழிலென மாறிக் கூட்டுக.

     7. கரம்பை விடர் அளை நிறையவென்றது முன்பு நீரேறாத கரம்பை
வயல்களிற் 1கமர்வாய் நீர்நிறைய வென்றவாறு.

     விடரளை நிறைய (7) வாய்பரந்து மிகீஇயர் (11) என முடிக்க.

     கோடை நீடுகையாலே குன்றம் புல்லெனும்படி (8) அருவியற்ற காலை
(9) எனக் கூட்டியுரைக்க.

     11. வாய் பரந்து மிகீயரென்றது இடத்திலே பரந்து நீர்தான் தன்னை
மிகுக்க வேண்டி என்றவாறு.

     12. உவலை சூடி உருத்துவரும் மலிர்நிறையென்றது தழைகளைச் சூடித்
தோற்றிவரும் வெள்ளமென்றவாறு.

     தன்னை வயல் பொறுக்குமாறு காணவென்று போர்வேட்டு வருவாரைப்
போலுமென்று கூறிய இச்சிறப்பானே இதற்கு, 'உருத்துவரு மலிர் நிறை'
என்று பெயராயிற்று.

     வாய்பரந்து மிகீஇயர் (11) உருத்துக் (12) கரையிழிதரும் நனந் தலைப்
பேரியாற்று (10) மலிர்நிறைச் (12) செந்நீர் (13) என மாறிக் கூட்டுக.

     பெருவறற்காலையும் (9) நின் அகன்றலைநாடு (14), புலம்பா வுறையுட்
டொழிலை நீ ஆற்றலின் (6) திருவுடைத்து (1) எனக் கூட்டி வினை முடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன் நாடுகாத்தற் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1 - 6. சேரனது அரசாட்சிச்சிறப்பு இவ்வடிகளிற் கூறப்படும்.

     1. பெருவிறற்பகைவர் - முன்பு பெரிய வெற்றியையுடைய பகைவரது;
'வென்றிக்களிறு - முன்பு வெற்றியையுடைய களிறு' (சீவக. 14, ந.)

     2. பைங்கண் யானைப் புணர்நிரை துமிய - பசிய கண்ணை யுடைய
யானையினது, தம்மிற் கூடின வரிசை அழியும்படி.

     3. உரம் துரந்து எறிந்த - வன்மையினால் செலுத்தி வேலையெறிந்த.
கறையடி - இரத்தக் கறையையுடைய அடி; இது மறவருக்கு அடை.

     4. கதழ் தொடைமறப்ப- விரைந்து அம்பு தொடுத்தலை மறக்கும்படி.

     5. நாடுகாவலை இனிமையாகச் செய்து பயிர்விளைவுகள் குறையாமல்.


     1கமர் - வெடிப்பு.