8

வழங்குகின்றது. அதனால் இவருடைய காலம் குணவீரபண்டிதர் காலத்திற்குப்
பிற்பட்டதென்று நினைக்க இடமுண்டு. இவர் திருக்குறளையும் புறநானூற்றையும்
மதுரைக் காஞ்சியையும் மேற்கோளாகக் காட்டுகிறார். இவ்வுரை சுருக்கமாக
அமைந்துள்ளது. அங்கங்கே பொருளை முடித்துக்காட்டும் இயல்புடையவர்
இவ்வுரையாசிரியர். செய்யுளுக்குப் பெயரமைந்ததற்குக் காரணமான நயத்தையும்
தூக்கு, வண்ணம், துறை இவற்றின் பொருத்தங்களையும் இவர் எடுத்துக்
காட்டுகிறார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், 'இதனால்இன்னது
பெறப்பட்டது' என்று செய்யுளின் கருத்தை எடுத்துச் சொல்லுகிறார். இவர்
சில இடங்களில் எழுதும் இலக்கணக் குறிப்புக்கள் பிற உரையாசிரியர்கள்
எடுத்துக்காட்டாதன. இந்த உரையைக் கொண்டு பாட்டின் பொருளை ஒருவாறு
அறிந்து கொள்ளலாம். புறநானூற்று உரையைப்போலப் பதவுரையாக
அமையாமையின் தமிழ்மாணாக்கர்களுக்கு இந்த உரை மாத்திரம்
போதியதன்று. இது பதவுரையைப் போன்று விரிவாகவும் குறிப்புரையைப்
போன்று சுருக்கமாகவும் இன்றி இடைப்பட்டதாக உள்ளது. ஒவ்வொரு
செய்யுட்கும் பின்னே உரை எழுதும் இயல்புடைய இவர் பதிகங்களுக்கு
மாத்திரம் முன்னே குறிப்புரை எழுதுகின்றார். சரித்திரச் செய்திகள் நிரம்பிய
பதிகங்களுக்கு விளக்கமான உரை எழுதாமையால் அச்செய்திகளைத்
தெளிவாக உணரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திலதென்று தோற்றுகின்றது.

     ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு,
பெயரென்பன உரையில்லாத மூலப்பிரதிகளிலெல்லாம் இருத்தலின், அவை
உரையாசிரியரால் எழுதப்பட்டனவல்ல வென்பதும், நூலாசிரியர்களாலோ
தொகுத்தாராலோ எழுதப்பட்டன வென்பதும், பதிகங்கள் உரைப்பிரதிகளில்
மாத்திரம் காணப்படுதலின் அவற்றை இயற்றினோர் நூலாசிரியரோ
தொகுத்தோரோ அல்லரென்பதும் தெரிகின்றன. ஆயினும் பதிகங்களில் உள்ள
சரித்திரச் செய்திகளையும் பாடிப் பெற்ற பரிசிலைப்பற்றிய குறிப்பையும்
நோக்கும்போது இவற்றை இயற்றினோர் சேர அரசர்களுடைய வரலாற்றையும்
பாடினோரைப் பற்றிய செய்திகளையும் நன்கறிந்தவரென்று புலப்படுகின்றது.
இப்பதிகங்கள் ஆசிரியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும்
தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெறுகின்றன. இந்நூலில் வந்துள்ள துறைகள்
முதலியன வருமாறு :-

     துறைகள்:- இயன்மொழி வாழ்த்து, உழிஞையரவம், ஒள்வாளமலை,
களவழி, காட்சி வாழ்த்து, காவன் முல்லை, குரவைநிலை,
செந்துறைப்பாடாண்பாட்டு, தும்பையரவம், நாடுவாழ்த்து, பரிசிற்றுறைப்
பாடாண்பாட்டு, பாணாற்றுப்படை, பெருஞ்சோற்றுநிலை, முல்லை,
வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு, வாகை, வாகைத்துறைப் பாடாண்பாட்டு,
விறலியாற்றுப்படை.