பக்கம் எண் :

85

     5. தங்கதற்குரிய கடற்கரைச் சோலை ஓங்கிய மணலடைந்த
கரையினிடத்து.

     6. மணலிலே தாழ்ந்த அடம்பங்கொடியை அணிந்த கடலில் சங்குகள்
ஒலிக்க; மலைந்த-மோதிய எனலுமாம்.

     7. இலங்குநீர் முத்தம் - விளங்குகின்ற தன்மையையுடைய முத்து;
விலங்குநீர் முத்தமெனக் கொண்டு, மாறுபட்ட அலைகளிலுள்ள முத்து எனப்
பொருள் கொள்ளுதலுமாம். வார் துகிர் எடுக்கும் - நீண்ட பவளத்தின்
கொடியை வேண்டுவார் எடுத்தற்கிடமாகிய.

     8. குளிர்ந்த கடற்பக்கத்தையுடைய நெய்தல் நிலத்திலுள்ள மக்களும்.
நெய்தலும் மருதமும் மென்பாலெனக் கூறப்படும் (புறநா. 42 : 17-8 , உரை)

     கழி துழைஇச் சினையில் குருகு இறைகொள்ளும் கானல் பொருந்திய
கரையினிடத்து வளை ஞரலத் துகிர் எடுக்கும் மென்பால் என்க.

     9-13. பாலைநிலத்து இயல்பு.

     9. காந்தட்பூவாற் செய்தகண்ணியையும் கொலை செய்யும் வில்லையும்
உடைய வேடர். 10. சிவந்த கொம்பையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு.
காட்ட - காட்டிலுள்ள.

     11. வன்மையையுடைய யானையினது வெள்ளிய தந்தத்தையும் கொண்டு.

     12. செல்வத்தையுடைய கடைத்தெருவில் தாம் வாங்கும் கள்ளுக்கு
விலையாக் கொடுக்கும். ஆமான் ஊனையும் வேழத்து வெண் கோட்டையும்
கள்ளுக்கு விலையாக் கொடுத்தனர். "அண்ணல் யானை வெண்கோடு
கொண்டு, நறவுநொடை நெல்லி னாண்மகி ழயரும்", "வல்லி லிளையர்
தலைவர்......................அரிய லாட்டிய ரல்குமனை வரைப்பின், மகிழ்நொடை
பெறாஅ ராகி நனைகவுட், கான யானை வெண்கோடு சுட்டி" (அகநா.
61 : 9 - 10, 245 : 7 - 11). பிழி - கள் நொடை - விலை.

     13. குன்றுகள் கலந்த புல்லிய பாலைநிலத்து மக்களும். வைப்பு:
ஆகுபெயர்.

     14-21. மருத நிலத்தின் இயல்பு.

     14. கரும்புதான் முற்றிவிளையும் காலத்தல்லாமலும், எப்பொழுதும்
அறுத்து முடியாமல்; என்றது என்றும் கரும்பு அறுக்கும்
பாங்குடையதாயிற்று என்றபடி.

     15.அரி கால் அவித்து - நெல்லின் சூட்டை அவியச் செய்து. பல பூ
விழவின் - பல பூக்களால் கடவுளை வழிபடும் விழாவையுடைய; "இந்திர
விழவிற் பூவி னன்ன" (ஐங். 62 : 1) என்றலின் இவ்விழா இந்திரனை நோக்கிச்
செய்யப்பெறுவதுபோலும்.

     16-7. இனிமை பரவிய மருதமரத்தின் அடி விழும்படி மோதி
நுரையாகிய வெள்ளிய தலையையுடைய சிவந்த புதுப்புனல் எங்கும் பரந்து
தான் புகும் இடங்களை மிக்க வளமுடையதாகச் செய்யும். வெண்டலைச்
செம்புனல்: பதிற். 87 : 2 - 3.

     18. பலசூழ் பதப்பர் பரிய - பல வைக்கோற்புரிகள் சூழ்ந்த
மணற்கோட்டை கரைய; மணற்கோட்டை வெள்ளத்துக்கு அணைபோடும்
பொருட்டு இடப்பட்டது.