பக்கம் எண் :

87

     37. நெய்த்தோர் - இரத்தம். நிறை மகிழ் இரும்பலி - நிறைந்த கள்ளை
யுடைய பெரிய பலி; பதிற். 19 : 6, உரை.

     38. முரசுறை கடவுள் விரும்புதலால் எறும்பும் மொய்யாத வியப்பைத்
தரும் முறையினால்.

     34-9. முரசுறை கடவுளுக்குப்பலியாக ஓச்சிய பிண்டத்தைப் பேய்
மகளும் எறும்பு முதலியனவும் பெறாமல் இருப்ப, காக்கையும் பருந்தும்
உண்டன.

     40. புறங்கொடுத்து ஓடாத கொள்கையையும், தாங்கள் செய்த அரிய
போர்த்தொழில்களைப் பொறித்தலையுடைய கழற்காலையும் உடைய.
ஒண்பொறிக் கழற்கால் : பதிற். 34 : 2.

     41. பெரிய போரிலே பகைவரைச் சிதைத்த, மேலும் போரை விரும்பும்
வீரரது.

     42. இடி பூமியை அதிரச் செய்யும் குரலைப்போன்ற ஆரவாரத்தோடு.
கொளை புணர்ந்து - யாழிசை சேரப் பெற்று; கொளை - நரம்புக்கட்டு; அது
யாழுக்காகி இங்கே யாழிசைக்காயிற்று. கோட்பாடென்பர் உரையாசிரியர்.

     43. போர்வீரருக்கு மிக்க சோற்றை அளித்தற்கு ஒலிக்கும்.
பெருஞ்சோறு உகுத்தல் : புறநா. 2 : 16, குறிப்புரை.

     43-4. தழங்கு - ஒலிக்கும். முரசு எறியும் என்க; எறியும்; முற்று.
மு. 'வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த
படையாளரும் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப்
பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்று நிலை'
(தொல். புறத். 8, ந.)

     (பி - ம்.) 1. இணர்த்ததை. 38. இறும்பூதுபிரப்பின். (10)

     3. இதன் பதிகத்து அகப்பாவெறிதலைப் பகற்றீ வேட்டற்கு
அடை யாக்கியுரைக்க.

     4-5. முதியரை மதியுறழ்மரபிற்றழீஇ மண்வகுத்தீத்தெனக் கூட்டித்
1
தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோடொத்த தன் தண்ணளியால்
தழீஇக்கொண்டு அவர்க்குத் தன்னாட்டைப் பகுத்துக் கொடுத்தென உரைக்க.

     7. இருகடலுமென்றது தன்னதாய மேல்கடலும் பிறநாட்டதாய்ப் பின்பு
தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய நாட்டிற் கீழ்கடலுமென்றவாறு.

     6-7. கருங்களிற்றியானைப் புணர்நிரைநீட்டி இருகடனீரும் ஒரு
பகலாடியென்றது அவ்விருமுந்நீரும் ஒருபகலிலே வரும்படி யானைகளை
நிரைத்து அழைப்பித்து ஆடியென்றவாறு.

     8. அயிரை பரைஇயென்றது தன்னாட்டு 2அயிரையென்னும் மலையில்
வாழும் கொற்றவைக்கடவுளைத் தன்குலத்துள்ளார் செய்து வரும் வழிபாடு
கெடாமல் தானும் வழிபட்டென்றவாறு.

     ஆற்றல்சான் முன்போடு (8) காடுபோந்த (10) எனக்கூட்டுக.


     1இங்ஙனம் தன் குலத்து முதியோருக்கு நாட்டைப் பகுத்துக்
கொடுத்து ஆளச் செய்யும் வழக்கம் பிற்காலத்துச் சோழ மன்னர் சிலரிடத்தும்
இருந்ததென்பது அவர்கள் மெய்க் கீர்த்திகளால் அறியப்படுகின்றது.

     2"கடவு ளயிரையி னிலைஇ" (பதிற். 79 : 18, உரை)