பக்கம் எண் :

93

     14. ஆண் கடன் இறுத்த - வீரருக்குச் செய்யவேண்டிய கடமைகளை
ஒழுங்காகச் செய்துமுடித்த; என்றது பகைவரை வெற்றிகொண்டு,
அவ்வெற்றிக்குக் காரணமாக நின்ற வீரருக்கு வரிசையும் பரிசுமளித்தான்
என்றபடி. பூண்கிளர் வியன்மார்பு - பேரணி விட்டு விளங்குகின்ற அகன்ற
மார்பு; எழுவாய்.

     15. தண் தளி தலைஇய - தண்ணிய துளியைப் பெய்த.

     16-7. வடக்குத் தெற்காகச் செல்லும் மார்க்கத்தைத் தடுத்து விட்டு
விளங்குகின்ற சிகரத்தை உடையதாகி அழகுபெற்ற பனிமிக்க இமயமலையினது,
பிறமலைகளை வென்ற வெற்றியையுடைய பக்க மலையை யொப்பது. விலகு
தலை என்றது மின்னுகின்ற இமயமலையின் பொற்கோட்டை; "மின்னுமிழ்
வைரக் கோட்டு விளங்கொளி யிமயமென்னும், பொன்னெடுங் குன்றம்"
(சீவக. 2417)

     18-20. தேவருக்குப் பயந்து ஆகாயத்திலே அவுணர் அமைத்த
இயங்குகின்ற அரணத்தின் கதவைக் காக்கின்ற கணையமரம் மேலேழுந்தாற்
போன்றன பருத்த அழகிய வலிமையையுடைய முழவனைய தோள்கள்.
நிவந்தன்ன: முற்று. வானத்து இழைத்த தூங்கெயிலென்றது தேவர்களினின்றும்
தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அரசர் அமைத்த மூன்று அரணங்களை;
அவற்றை ஒரு சோழன் அழித்தான்; "திறல் விளங் கவுணர் தூங்கெயி
லெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்" (தொல். களவு. 11,
ந. மேற்)

     21. வளைஇய - வளைந்த.

     22. வண்புகழ் நிறுத்த - கொடையால் வரும் புகழைத் தன்னிடத்தே
நிறுத்திய; "வண்புகழ் மூவர்" (தொல். செய். 79). வகைசால் செல்வத்து -
கூறுபாடு மிக்க செல்வத்தையுடைய.

     23. வண்டன் : ஒரு கொடையாளிபோலும். வண்டுபட - வண்டுகள்
ஒலிக்கும்படி. 24 - 8. சேரன் மாதேவியின் சிறப்பு.

     24. ஒலிந்த - தழைத்த. அறஞ்சால் கற்பின் - அறக்கற்பையுடைய.

     25-6. குழைக்கு விளக்காகிய ஒண் நுதல் - காதணிக்கு விளக்கம்
அளிப்பதாகிய ஒள்ளிய நெற்றி; "குழைவிளங் காய்நுதல்" (குறுந். 34 : 7,
பி - ம்.) பொன்னாலாகிய ஆபரணங்களுக்கு விளக்கம் அளிப்பவளாகிய.
அ வாங்கு உந்தி - அழகிய வளைந்த கொப்பூழ்.

     28. செம்மீன் - அருந்ததி. தொன்னகர்ச் செல்வியென்றது
பெருந்தேவியை. கற்புக்கு அருந்ததியைக் கூறுதல்: பதிற். 89 : 19-20;
பெரும்பாண். 302 - 4 குறிப்புரை.

     29-30. நிலன் அதிர்பு இரங்கலவாகி - பூமியிலுள்ளார் நெஞ்சு
நடுங்கும்படி முழங்காதனவாகி; அதிர்பு : எச்சத்திரிபு. வலனேர்பு வியன்பணை
முழங்கும் - வெற்றிக்களத்தே எழுச்சி பெற்று அகன்ற முரசு முழங்கும்;
வெற்றியை மேற்கொண்டு முழங்குமெனலுமாம். வேல்மூசு அழுபத்து -
வேற்படை நெருங்கிய பரப்பில்.

     31. விரியாது அடங்கிய பனைமாலையையும் பொன்னாலாகிய கழலை
யணிந்த வலிய தாள்களையும் உடைய: புடையல் - பனைமாலை (பதிற்.37 : 8,
42 : 1, 57 : 2; புறநா. 99 : 5). இவை சேரன் படையிலுள்ளாருக்குரியன.