உரைநலம் (திரு.க.வெள்ளைவாரணனார், தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) செந்தமிழ் மொழியின் தீஞ்சுவையினை இனிது விளக்குவனவாகிய சங்க இலக்கியங்குளுள் ஒன்றாய்த் திகழ்வது பதிற்றுப்பத்து என்னும் இத்தொகை நூல். ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் சேரநாட்டை ஆட்சிபுரிந்த சேரமன்னர் பதின்மரையும் புலவர் பதின்மர், பத்துப்பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுதி யாதலின், இது பதிற்றுப்பத்து எனப்பெயர் பெறுவதாயிற்று.இத்தொகையிலுள்ள எல்லாப் பாடல்களும் சேர வேந்தர்களின் கல்வித்திறம், மனத்திண்மை, புகழ்நோக்கு, ஈகைத்திறம் ஆகிய பெருமிதப்பண்புகளையும், படைவன்மை, புகழ்நோக்கு, ஈகைத்திறம் ஆகிய பெருமிதப்பண்புகளையும், படைவன்மை, போர்த்திறம், பொருள்செயல்வகை குடியோம்பல் முறைஆகிய ஆட்சித்திறத்தினையும் நயம்பெற விளக்கும் நற்பனுவல்களாம். இவையாவும் புறநானூற்றுப் பாடல்களைப் போன்று புறத்திணையைப் பொருளாகக்கொண்டு பாடப்பெற்றனவாகும். சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் தாம் பெறுதற்குரிய பரிசிற் பொருளையே பெரிதென நம்பித் தகுதியில்லாதாரைப் பாடும் இயல்பினரல்லர். தமக்கு இயல்பா யமைந்த புலமைத்திறத்திணையோ, அன்றித் தாம் பரிசில்பெற விரும்பிய தலைவனையோ அவனால் அளிக்கப்படும் பரிசிற்பொருளையோ கருதாமல், தம்மாற் பாடுதற்குரிய நல்லியல்பாக அத் தலைவன்பால் அமைந்துள்ள ஒழுகலாறுஒன்றையே தம் பாடலுக்குரிய நற்பொருளாகக் கொண்டிருந்தார்கள். அக்காலத் தலைமக்களும் இத்தகைய புலவர்களால் நன்கு மதிக்கப்பெறும் சிறப்பினையே வாழ்க்கையில் தாம் பெறுதற்குரிய நற்பேறாகப் பெரிதும் விரும்பினார்கள் ஆகவே, இங்ஙனம் புலவராற் பாடப்பெறும் நற்பண்புகளை ஆளுதற்றன்மையாகிய தகுதி சங்ககாலத் தலைமக்கள்பால் நன்கு அமைவதாயிற்று. குடும்பவாழ்விலே மேற்கொள்ளுதற்கு உரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல்வாழ்விலே மேற்கொள்ளுதற்கு உரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகையொழுகலாறாகிய புறவொழுக்கங்களும் ஆகிய இவற்றை, அடிப்படையாகக் கொண்டல்லது ஒருவர் ஒருவரைப் பாடுதல் என்பது இயலாத செயலாகும். புறத்திணை ஏழனுள் வெட்சி முதல் காஞ்சி யிறாகச் சொல்லப்பட்ட அறுவகை யொழுகலாறுகளும் தலைமகனுடைய அன்பின் வழிப்பட்ட |