வாய்மை யென்னாது “வாய்மொழி” யெனல் வேண்டிற்று. காலை யன்ன வாய்மொழி யென்றதற்குப் பழையவுரைகாரர், “ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி” யென்றும், “மொழியா னென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினு மமையும்” என்றும் கூறுவர். எவ்வம் சூழாக் கொள்கையும் காலை யன்ன வாய்மையும் உடையராதலின், ஏனையோ ருள்ளத்தே அவரைக் கண்டவழி உட்குத் தோன்றுதலால் முனிவரை, “உருகெழு மரபின் கடவுள்” என்றார். பொறி புலன்களின் செயலெல்லையைக் கடந்தமைபற்றி மக்கட் பிறப்பினராகிய முனிவர் கடவுளெனப் பட்டனர் என்றுமாம் ; “முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால், இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக்கூறிய, அக் கடவுள் மற்றக் கடவுள்” (கலி. 93) என முனிவர் கடவுளாகக் கூறப்படுமாறு காண்க. பேணியரென்னும் வினையெச்சம் கொண்ட வென்னும் வினைகொண்டது. சொல், சொல்லிலக்கணம், பெயர் - பொருள்; எனவே பொருளிலக்கணமாயிற்று. பழையவுரைகாரரும், “பெயர், பொருளிலக்கணம் சொல்லும் நூல்; ‘பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய’ (பதிற். 90) என இத் தொகையுண் மேலே வந்தமையால் பெயரென்பது பொருளாம்” என்பர். நாட்டம், சோதிடம். கேள்வி - வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாய்க் கேட்கப்படும் முறைமை யுடையதாகலின், கேள்வி யெனப்பட்டது. நெஞ்சம், ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றக் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் றாளை வணங்குத லென்பவாதலானும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுதற்குரிய ஞானமும் வீடுபேறும் பெறுவிக்கும் சிறப்புடைய அருணூலாதல்பற்றி, ஆகமத்தை “நெஞ்ச” மென்றார். செவி முதலிய அறிகருவிகளால் உணரப்படும் உலகியற் பொருள்களின் பொய்ம்மையுணர்ந்து கழித்தவழி யுளதாய் நிற்கும் ஞானப்பொருள் நெஞ்சால் உய்த்துணரப்படுவதன்றிப் பிறிதோராற்றால் அறியப்படுவ தன்மையின், நெஞ்சினை அந் நெறிக்கட் செலுத்தி ஞானக்காட்சி பெறுவிக்கும் சிறப்புடைமைபற்றி, ஆகமத்தை நெஞ்சமென்றா ரென்றுமாம். இனிப் பழையவுரைகாரர், “நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை” யென்பர்; ஏனைச் சொல் பெயர் முதலியன போல நெஞ்சம் நூற்காகாது வேறாயின், ஐந்தென்னும் தொகை பெறுதல் பொருந்தாதாதலால் அது பொருளன்மை யுணர்க. அவை, சொல் முதலிய ஐந்தன் அறிவு, வேதம் முதலியவற்றின் அறிவு பொது அறிவும், ஆகம அறிவு உண்மை யறிவுமாம் எனத் தேர்ந்து கொள்க. “ஆகம மாகிநின் றண்ணிப்பான்றாள் வாழ்க” (திருவா. சிவபு. 4) என மணிவாசகர் கூறுதல் காண்க. முனிவர் கடன் கேள்வியொடு பயின்ற வேள்வியால் இறுக்கப்படுமென்ப வாகலி்ன், கடவுட் பேணியர்கொண்ட தீ யென்றும், இத் தீயினை யோம்புதற்கு மேலே கூறிய சொல்முதலிய வைந்தன் கேள்வியும் துணையாமென்பது பற்றி அவை துணையாகக் கொண்ட தீயென்றும் கூறினார்; “வேள்வியால் கடவுளருத்தினை கேள்வியின், உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை” (பதிற். 70) என்று பிறரும் கூறுதல் காண்க. வேள்வித்தீ சுடர்விட்டெழுங்கால், அதனைக் கடவுளர் விரும்பி யேற்று வேட்கும் தம் கருத்து நிறைவிப்ப ரென்ற |