விருப்பந் தோன்றி உள்ளத்தே உவகை மிகுவிப்ப, அது மெய்யின்கண் வெளிப்பட்டு நிற்குமாறு தோன்ற, “விரும்பு மெய் பரந்த” என்றார். விருப்பு, விரும்பென மெலிந்தது; பழையவுரைகாரர், “விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது” என்றார். ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுப வென்னும் நூற்றுணிபு பற்றி, “பெரும்பெயராவுதி” யென்றார். ஆவுதி, வடசொற் சிதைவு. 8 - 13. வருநர்...........ஆவுதி. உரை : வருநர் வரையார் வார வேண்டி - தம்பால் வருவோர் வரைவின்றி யுண்ண வேண்டி; விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் - விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டு வாணிகர்; ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை - ஊனை வெட்டும் மணைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி; குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனாது ஆர்ப்ப - வேக வைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலிபோல அமையாது ஒலிக்க; செழு நகர் நாப்பண் - செழுமையுடைய மனையின்கண்ணே; அடும் மை எழுந்த அடு நெய் ஆவுதி - அடுதலாற் புகையெழுந்த அடிசிலின்கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப் புகையும். எ - று. என்றது, விருந்தாய் வந்தார் உண்ணுங்கால் அவர்க்குப் புகையெழ இட்ட அடிசிற் சோற்றி்ல் பெய்யப்படும் நெய்யாகிய ஆவுதி என்றவாறாம். அடு நெய், அடிசில் நெய். இஃது உருக்கிப் பெய்யப்படுதலின் அடு, நெய்யெனப்பட்டது. பாசவராவார்ஆட்டு வாணிகர். இவர்பால் வாணிபம் குறித்துப் பலர் நெடுந் தொலைவிலிருந்தும் வருதலின், அவரை விருந்தேற்றோம்பலும் இவர்க்குக் கடனாதலால், விருந் துண்பிக்குமிடத்து அவர்கள் தாம் இடுவனவற்றை நிரம்ப வுண்டல் வேண்டி விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மிக வுடைய ரென்பது தோன்ற, “வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண் மாறாது” என்றார். வார்தல், சேரக் கொள்ளுதல். அகத்தெழும் அன்பு அவ்வளவில் அமையாது முகத்தினும் சொல்லினும் இனிது விளங்கித் திகழ வேண்டுதலின், “விருந்துகண் மாறாது” என்றார். தம்மை நோக்கி வரும் விருந்தினர் குழைந்து வேறிடம் பெயர்ந்து செல்லாதபடி முகத்தால் இனியராய் வரவேற்கும் சிறப்புத் தோன்றக் “கண்மாறாது” என்றா ரென்றும், விருந்துகண் மாறாது உணீஇய வென்பதைக் கண் மாறாது விருந்தினர் உணீஇய வென வியைத்து, வேறிடம் மாறிச் செல்லாது தம்மிடமே நின்று தமது விருந்துணவை யுண்டற்பொருட்டு என்றும் உரைப்பினுமமையும். உணீஇய வென்பது பிறவினைப் பொருளில் வந்த பெயரெச்சம் ஊனம், இறைச்சி கொத்தும் குறடு என்பது பழையவுரை. ஊனை வைத்துக் கொத்தித் துண்டிப்பதற்கு அடிக்கட்டையாய்ப் பயன்படும் மர மணையை “ஊனம்” என்று வழங்குப. “ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை” யென்றதனால், இக் குறைகள் சோற்றோடு ஒருங்கு பெய்து சமைக்கப்படு மென்பது விளங்கும். |