பக்கம் எண் :

118

துவையும்   கறியும்  பலவகையவாதலின்,  “குய்யிடு தோறும்” என்றார்.
மை,  புகை; அடிசிற்கண்  அடு நெய்யைப் பெய்தவுடன் புகை யெழும்
விரைவு  தோன்ற,  எழுந்தவென  இறந்தகாலத்தாற் கூறினார். கொழுங்
குறை  குய்யிடு  தோறும்  கடலொலி கொண்டு ஆனா தார்ப்ப, அடும்
மையெழுந்த  ஆவுதியென  வியையும்.  பழையவுரைகாரர், ‘கடலொலி
கொண்டு  ஆர்ப்ப’ வெனக் கூட்டி, “ஆர்ப்ப வெழுந்த வென முடிக்க”
என்று  கூறி,  “கடலொலி  கொண்ட வென்பது பாடமாயின், கடலொலி
கொண்ட  நகர்  என்க” என்பர். விருந்தோம்பலும் வேள்வியெனப்படு
மாதலின்,   அதுகுறித்து   அடும்  நெய்யும்  ஆவுதி  யெனப்பட்டது;
“இனைத் துணைத் தென்பதொன் றில்லை விருந்தின், துணைத் துணை
வேள்விப்  பயன்”  (குறள்.  87)  என்று  சான்றோர் கூறுதல் காண்க.
விருந்தினரை     யுண்பித்தற்குச்    சமைக்கப்படும்    உணவின்கட்
பெய்யப்படும் நெய்யை அடுநெய் யாவுதி யெனச் சிறப்பித்த நலத்தால்
இப்பாட்டும்    இத்   தொடராற்   பெயர்   பெறுவதாயிற்று.   இனி,
பழையவுரைகாரர்,   “அடு  நெய்யை  யாவுதி  என்றது  விருந்துபுறந்
தருதலையும்  ஒரு  வேள்வியாக்கி, ஆள்வினை வேள்வி யென்று ஒரு
துறையாக  நூலுட்  கூறலான்  என்பது”  என்றும்,  “ இச் சிறப்பானே
இதற்கு அடுநெய் யாவுதி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.

14 - 19. இரண்டுடன்..............மார்ப.

உரை :  இரண்டுடன் கமழும் நாற்றமொடு - பெரும்  பெயராவுதி
அடு  நெய்  யாவுதி  யென்ற இருவகை ஆவுதிப் புகை கமழும் நறிய
புகை   மணத்தால்;  வானத்து  நிலைபெறு  கடவுளும்  விழைதக  -
வானுலகத்தில்  நிலைபெற்ற  கடவுளர்தாமும் விருப்பம் கொள்ள; ஆர்
வளம்  பழுநிய  ஐயந்தீர்  சிறப்பின்  -  குறையாத  வளம் நிறைந்த
சிறப்பினையும்;  மாரியங்  கள்ளின்  -  மழை  போல் சொரியப்படும்
கள்ளினையும்;    போர்    வல்    யானை   -   போரிலே  வல்ல
யானையினையும்;  போர்ப்புறு  முரசம் கறங்க - ஏற்றுரிவை போர்த்த
போர் முரசம் முழங்க; ஆர்ப்புச் சிறந்து - ஆரவாரம் மிக்குச் சென்று;
நன்  கலம்  பேணித்  தரூஉம்  மண் படு மார்ப பகைவர் திறையாகத்
தரும்  நன்  கலங்களைப் பேணிக் கொணரும் மண்பட்ட மார்பையும்
உடையவனே எ - று.

இரண்டும்  உடன்கமழும்  நாற்றத்தால் கடவுளும் விழைதக, வளம்
பழுநிய    சிறப்பினையும்,     கள்ளினையும்,      யானையினையும் 
மண்படு    மார்பினையுமுடையோய்       என          இயையும்
நாற்றமொடுஎன்பதில், ஒடு      ஆனுருபின்  பொருட்டு,     நாற்றம்,
நறுமணம்.  “ஆவுதி      யென்ற  விரண்டனையும்    அவற்றானாய 
புகைமேற்      கொள்க.      கடவுளும்     விழைதக   வென்றது,
கடவுளரும்  இவ்வாறு  நாம்  அறஞ்செய்யப்   பெறின்,    அழகிது
என்று      அது        விரும்ப        வென்றவா”      றென்று
பழையவுரைகாரர்  கூறுவர்.  பேணி  யென்பதனை, நன்கலம் பேணித்
தரூஉம்  எனக்  கூட்டிக்  கொள்க.  இனி,  பழையவுரைகாரர்,“பேணி
யென்றது   முன்   சொன்ன  வேள்வியால்  தேவர்களையும்,  பின்பு
அதனோடு  ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய்
வரும் மக்களையும் பேணியென்றவாறு” என்றும், “அதனைத் திரித்துப்
பேணப்