பக்கம் எண் :

119

பழுநிய    வென முடிக்க” வென்றும் கூறுவர். வேள்விக்கண்ணெழும்
நாற்றத்தை   வானுலகத்துத்   தேவர்  விரும்புவ  ரென்ப  வாதலின்,
“இரண்டுடன்  கமழும்  நாற்றமொடு  வானத்து  நிலைபெறு கடவுளும்
விழைதக” என்றார்; பிறரும், “வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற
வுணவி  னோரும்”  (புறம்.  62)  என்பது காண்க. ஆர்வளம் பழுநிய
சிறப்பாவது,    “கொடுக்கக்    கொடுக்கக்    குறைபடாத   நிறைந்த
செல்வத்திலே   நின்று   பழுத்த   சிறப்பு”   என்பது   பழையவுரை.
ஆர்வளம்  நிறைந்தவழி  அதனாற்  பிறக்கும்  சிறப்பின்கண்   ஐயம்
பிறவாமையின், “ஐயந்தீர் சிறப்பு” என்றார். கள்ளிற் போர்வல்  யானை
எனற்பாலது  ஒற்று  மெலிந்து  “கள்ளின்  போர்வல்  யானை”  என
நின்றது.  மண்படு  மார்பம்  - நறுஞ் சாந்தால் புனையப்பட்ட மார்பு;
‘மகளிராய்ந்த,   மோட்டுவெண்   முத்தமின்னு   முகிழ்முலை  யுழுது
சாந்தம்,  கோட்டுமண் கொண்ட மார்பம்” (சீவக. 2303) என்று பிறரும்
கூறுதல்  காண்க. இனிப் பழையவுரைகாரர், “மண்படு மார்ப வென்றது
பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்ப” என்பர்.

20 - 24. முல்லை..............மெய்ம்மறை.

உரை : முல்லைக்   கண்ணி - முல்லைப் பூவால் தொடுக்கப்பட்ட
கண்ணி     யணிந்த;     பல்லான்     கோவலர்    -   பலவாகிய
ஆனிரைகளையுடைய கோவலர்; புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பி
-  புல்லை நிறையவுடைய விரிந்த புலத்தில் அந் நிரை பலவற்றையும்
மேயவிட்டு;  கல்  உயர்  கடத்திடைக்  கதிர்மணி பெறூஉம் - கற்கள்
உயர்ந்த  காட்டிடத்தே  ஒளி  திகழும் மணியைப் பெறுகின்ற; மிதியற்
செருப்பின்    பூழியர்    கோவே   -   மிதியாகிய   செருப்பல்லாத
செருப்பென்னும் மலையையுடைய பூழி நாட்டவர்க்கு வேந்தே;  குவியற்
கண்ணி  மழவர்  மெய்ம்மறை - பலவகைப் போர்க்கண்ணி யெல்லாம்
குவியச் சூடிய மழவர்க்குக் கவசம் போன்றவனே எ - று.

ஆயர்    முல்லைக்கண்ணி சூடுப வாதலின், “முல்லைக் கண்ணிப்
பல்லான்  கோவலர்” என்றார்; “புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர்,
முல்லையொருகாழும்  கண்ணியும்”  (கலி. 115) என்று பிறரும் கூறுவர்.
ஆயரினத்திற்   புல்லினத்தாயர்,  கோவினத்தாயர்,  கோட்டினத்தாயர்
எனப்  பல ருண்மையின். ஈண்டு இவர் கோவினத்தாய ரென்பது படப்
“பல்லான் கோவலர்” என்றார். ஆ   பலவாதலின்,    அவை  நன்கு
மேய்தற்குரிய    புலம் என்றற்குப் “புல்லுடை வியன்புலம்”  என்றார்.
ஆக்கள்   தமக்கு   வேண்டிய   புல்லை   நிரம்பப்  பெறுமெனவே,
அவற்றையுடைய    ஆயர்    பெறுவன    கதிர்மணி    யென்றும்,
அம்மணிகளும்  கடத்திடைப்  பெறப்படுகின்றனவென்றும்   கூறினார்.
“கல்லிற் பிறக்கும் கதிர்மணி” (எ) என்பது நான்மணிக்கடிகை. மிதியல்
செருப்பு,  மிதியாகிய  செருப்பல்லாத  மலையாகிய செருப்பு; எனவே,
செருப்பென்னும்  மலையென்றவாறாம்.  “செருப்பென்பது  ஒரு மலை;
மிதிய  லென்பது  அடை;  மிதி  யென்று  செருப்பிற்குப்  பேராக்கிச்
செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக வுரைக்க”  என்றும்,
“குவியற்கண்ணி  யென்னும்  தொடை  நோக்கி  மிதியற் செருப்பென
வலிந்த”    தென்றும்,    “மிதியற்   செருப்பென்பதற்குப்   பிறவாறு
சொல்லுவாரு முள” ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர்.