பெருமிதப் பண்புகளை யடிப்படையாகக் கொண்டு அவன்பால் தோற்றும் வினைநிகழ்ச்சிகளைக் குறிப்பனவாகும். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையையோ அவராற் பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பலரும் பாடிப் போற்றுதலை விரும்பிய தலைமகனொருவன், தன்னுடைய அறிவு திரு ஆற்றல் ஈகை என்பவற்றை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றினைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமகனது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற்றென்பது ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்தாகும். வெட்சி முதல் காஞ்சி யீறாகிய அறுவகை யொழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வனவாகும் பாடாண் திணையிலோ பாடுதல்வினை புலவர்பாலும் அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ்செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய அறுவகையொழுகலாறுகளும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக் கொண்டு அவன்பால் தோற்றும் தனிநிலைத் திணைகளாம். பாடாண் திணையோ, தலைமகன்பால் நிகழும் மேற்கூறிய திணைநிகழ்ச்சிகளைத் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு தோற்றும் சார்புநிலைத் திணையாகும். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய அறுவகைப் புறத்திணைகளினும், குற்றமற்ற மனைவாழ்க்கையாகிய அகத்திணையினும் அமைந்த செயல்களாய்த் தலைமகனுடைய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப்பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கமைந்த ஒழுகலாறு, பாடாண்திணை யென்பது நன்கு புலனாம். பாடாண் திணையல்லாத பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே யெனினும், புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் மனக்குறிப்பின்றி, ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் வெட்சி முதலிய திணைகளின்பாற்படுவன என்றும், அச்செயல்களைக் கருவாகக்கொண்டு புலவன்பாடும்போது அவற்றால் உயர்ந்த உள்ளக்குறிப்பு, பாடாண்திணை யென்றும் வேறு பிரித்தறிதல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும், உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் நிலையில், ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் வழிப்பட்ட மனைவாழ்க்கையிலும் புகழுடன் |