பக்கம் எண் :

120

பூழியர்,     பூழி நாட்டவர்.  இப்  பூழி நாடும் சேரர்க்குரித் தென்பது
“பூழியர்  கோவே பொலந்தார்ப் பொறைய” (பதிற். 84) என்று பிறரும்
கூறுமாற்றாலறியலாம்.  வெட்சி,  கரந்தை,  வஞ்சி,  உழிஞை, நொச்சி,
தும்பை,   வாகை   எனப்  போர்க்கண்ணி  பலவாதலால்,  அவற்றை
யணியும்    மழவரை,    “குவியற்    கண்ணி   மழவர்”   என்றார்.
பழையவுரைகாரர்,   “குவியற்  கண்ணி  யென்றதற்கு  வெட்சி  முதல்
வாகை  யீறாய  போர்க்கண்ணி  யெல்லாம்  குவிதலையுடைய கண்ணி
யென்க”  என்பர்.  மழவர்  ஒருவகை  வீரர்.  இவர் குதிரைப்படைக்
குரியராய்ப்     போருடற்றும்     சிறப்புடையரென     மாமூலனார்,
“வண்டுபடத்ததைந்த  கண்ணி  யொண்கழல், உருவக் குதிரை மழவர்”
(அகம்.  2)  என்றும்,  “கறுத்தோர்,  தெம்முனை சிதைத்த கடும்பரிப்
புரவி,  வார்கழற்  பொலிந்த  வன்கண் மழவர்” (அகம். 187) என்றும்
கூறுகின்றார்.

25 - 29. பல்பயம்.................பொருந.

உரை : பல் பயந் தழீஇய - பல்வகைப்  பயன்களை நல்கும் காடு
பொருந்திய;  பயங்கெழு  நெடுங்  கோட்டு  -  தானும் நல்ல  பயன்
தருவதாகிய  நெடிய உச்சியையுடைய; நீர் அறல் மருங்கு வழிப்படா -
நீர்   போதரும்   பக்கத்தே  மேலேறிச்  செல்லுதலில்லாத;  பாகுடிப்
பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சா - சேய்மையிலிருந்தே நுனித்து
நோக்கும்  கொக்கின்  பரிவேட்டத்துக்கு  அஞ்சுத லில்லாத; சீருடைத்
தேஎத்த  முனைகெட  விலங்கிய  -  புகழ் படைத்த நாட்டினிடையே
பகைவர்  போருடற்றாவாறு குறுக்கிட்டுக் கிடக்கும்; அயிரை - அயிரை
யென்னும்;  நேருயர்  நெடு  வரைப்  பொருந  -  நேரிதாய் உயர்ந்த
நெடிய மலைக்குத் தலைவனே எ - று.

பல்  பய மென்றது, மலையைத் தழுவிக் கிடக்கும் காடுபடு பொருள்
பயங்கெழு  வெனப்  பின்னர்க்  கூறியது  மலைபடு  பொருள். நீரறல்
இருபெயரொட்டு.  நெடுங்கோட்டு,  நேருயர்  நெடுவரை  அயிரை, நீர்
அறல்  மருங்கு  வழிப்படா,  பரிவேட்  பஞ்சா  அயிரை, முனைகெட
விலங்கிய அயிரை என இயையும். அறல் மருங்கு வழிப்படா  அயிரை
யெனவும்,   கொக்கின்  பரிவேட்  பஞ்சா  அயிரை  எனவும்  நின்று
மீனன்மை    காட்டி     நிற்கும்     இத்தொடர்கள்,       அயிரை
மலைக்கு    வெளிப்படை.     நீரோடுங்கால்        அயிரை  மீன்
அதனை     எதிர்த்       தேறிச்        செல்லும்      இயல்பிற்
றாகலின்  அதனை     விலக்கற்கு,     “நீரறல்  மருங்கு வழிப்படா”
வென்றும்,   அம்மீன்  கூர்த்த  பார்வை  யினையுடைய  கொக்கிற்கு
அஞ்சுவது குறித்துப் “பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா”
என்றும்  கூறினார்.  பரிவேட்பு  -  விரைந்து  குத்தும்  கடுமை இம்
மீனைப்  பரதவர்  அசரை  யென்பர்.  இது  பெரும்பான்மையும் நீர்
மட்டத்துக்குச்  சிறிது  உள்ளேயே  உலவுவது.  அந்நிலையிற்  சிறிது
பிறழ்ந்தவழி   இம்மீன்   கொக்கின்   பார்வையிற்  படுதலின்,  அது
ஞெரேலெனப்    பாய்ந்து    கவர்தலின்,   கொக்கின்   பரிவேட்புக்
கஞ்சுவதாயிற்று.    பிறரும்,   “தண்கடற்   படுதிரை   பெயர்த்தலின்
வெண்பறை, நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்” (குறுந். 166) என்பது
காண்க.    கடலிடத்தே    யன்றிச்    சிறு   சிறு   நீர்நிலைகளிலும்
பழனங்களிலும் இது வாழ்வதுண்டு; “அயிரை பரந்த