குரித்தாய்த் தமக்கு இயைபில்லாத பொருளை விழையாமலும்; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து - குற்றமில்லாத அறிவுடையராய்ச் செம்மை நெறிக்கண் வழுவுதலின்றி; தம் அமர் துணை பிரியாது - தம்பால் அன்பு செய்து வாழும் வாழ்க்கைத் துணைவியைப் பிரியாமல்; பாத்து உண்டு - பலர்க்கும் பகுத்தளித்துத் தாமும் உண்டு இனிது வாழ; மூத்த யாக்கை யொடு பிணியின்று கழிய - வெறிதே மூத்த யாக்கையும் நோயும் இலராய் மிக்கு நிலவ; கடலும் கானமும் பல் பயம் உதவ; ஊழி உய்த்த உரவோர் உம்பல் - அரசியலை முறையே செலுத்திய பேரரசர் வழித் தோன்றலே எ - று. கழி கண்ணோட்டம் என்புழி நின்ற, கழி யென்னும் உரிச்சொல் ஏனைச் சினம் காமம் என்பவற்றோடும் சென்றியையும், அன்புமிக வுடைமை யென்றதற் கேற்ப, மிக்க அச்சமும், வாய்மையிடத்த தாகாத பொய்ம்மையும் எனக் கொள்க. ஏகாரம் எண்ணுக் குறித் தியல்வது. கழிய வென்பது, கழி யென்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினையெச்சம். தீது சேணிகந்து, நன்று புரிந்து, மாக்கள் மையில் அறிவினராய் நடந்து பாத்துண்டு பிணியின்று கழிய கடலும் காடும் பயம் உதவ, ஊழி யுய்த்த உரவோர் உம்பல் என இயையும், திகிரி யுருட்டிச் செங்கோ லோச்சும் வேந்தர் செய்வதும் தவிர்வதும் தேர்ந்து, தவிர்வதனைத் தவிர்த்தவழிச் செய்வது செய்தது போலச் செம்மை பயத்தலின், தீதினை முதற்கட் கூறினார். நன்றாற்றலிற் றாழ்க்கினும் தீது களைதலே வேண்டுவ தென்பதை, “நல்லது செய்த லாற்றீ ராயினும், அல்லது செய்த லோம்புமி னதுதான், எல்லாரு முவப்ப தன்றியும், நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே” (புறம். 195) என்று சான்றோர் கூறுதல் காண்க. வினைசெய்தற்கண் சினமும் அரசர்க்கு ஓரளவு வேண்டுதலின், விலக் குண்பது கழிசினமே யென்க. வேந்தனைச் “சினங்கெழு குரிசில்” (பதிற். 72) என்றும், “சினங்கெழு வேந்தர்” (புறம். 72) என்றும் சான்றோர் கூறுதலால், சினமும் ஓரளவு வேண்டியிருத்தல் துணியப்படும் உயிர்த் தோற்றத்துக்கும் அன்பும் அருளும் மன்னிய இன்ப வாழ்விற்கும் அளவுட்பட்ட காமம் இன்றியமையாமையின் கழி காமமே தீதென வறிக. “காமஞ் சான்ற கடைக்கோட் காலை............சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (தொல். பொ. 192) என்றும், “எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது, தானமர்ந்து வரூஉ மேவற்றாகு” மென்றும், “சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும், அறத்துவழிப் படூஉம்” (புறம். 31) என்பதனால் அறத்தின் இம்மைப் பயன்கள் நற்பொருளும் நற்காமமுமாம் என்றும் சான்றோர் ஓதுவது காண்க. எனவே, அறத்துக்குத் துணையும் பயனுமாகிய அளவுட்பட்ட காமத்தை விடுத்து அளவிறந்து செல்லும் கழிகாமமே நூலோரால் யாண்டும் விலக்கப்பட்ட தென் றறிக. குற்றம் செய்தோரை மேன்மேலு மூக்கு மாகலின், கழி கண்ணோட்டமும் தீதெனப்பட்டது. சின முதலிய மூன்றும் உள்ளத்தே யுருத் தெழுவனவாதலின், ஓரினமாக்கப்பட்டன. “காணாச் சினத்தான் கழிபெருங்காமத்தான், பேணாமை பேணப் படும்” (குறள். 866) என்பதனால், கழிசினமும் கழி காமமும் விலக்கப்படுவன காண்க. |