பக்கம் எண் :

126

அச்சம்    உள்ளத்தைச் சிதைத்து மெய்யினும் வாயினும் விளங்கத்
தோன்றலின்,    சின   முதலியவற்றைச்   சாரவைத்து,   உள்ளத்தே
யில்லாததைக்  கூறுவதாகிய  சொன்மே  னிற்கும்  பொய்ச் சொல்லை
அச்சத்தின்  பின்  வைத்தார்.  இவ்விரண்டையும்  ஓரினப்படுத்தியது
சொல்லோடியைபுண்மை  கருதி  யென்க, “அச்சமே கீழ்கள தாசாரம்”
(குறள்.  1075)  என்றும், “அச்சமுடையார்க் கரணில்லை” (குறள். 534)
என்றும்  சான்றோர்  விலக்கினமையாலும், கொலைக் கடுத்த நிலையிற்
றங்கும்  குற்றம்  பொய் கூறுதலாதலாலும் இவ்விரண்டும் விலக்குண்ப
வாயின.   “ஒன்றாக   நல்லது   கொல்லாமை   மற்றதன், பின்சாரப்
பொய்யாமை   நன்று”  (குறள்,  323)  என்பதனால்  கொலைக்கடுத்த
நிலையி்ற்றங்குவது  பொய்கூற  லென்பது உணர்க. அரசாட்சியின்கண்
பகைவரது   பகைமைக்கு  ஓரளவு  அஞ்சுதலும்,  வினைக்குரியாரைத்
தேர்ந்து     தெளிதற்கண்     புரைதீர்ந்த         பொய்ம்மையும்
வேண்டியிருத்தலின்,  மிக  அஞ்சுதலும், வாய்மைப்பாற் படாத பொய்
கூறுதலையும்  விலக்கினார்.  “அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு”
என்றும்,  “உட்பகை  யஞ்சித்தற்  காக்க வுலைவிடத்து, மட்பகையின்
மாணத்தெறும்”(குறள்.  882,  883)  என்றும் வருவனவற்றால் அச்சம்
ஓரளவு   வேண்டியிருத்தலும்,   இல்வழி  “வகையறிந்து  தற்காத்தல்”
இலனாய்  வேந்தன்  கெடுதலும்  பயனா  மென்க. “அஞ்சுவ தஞ்சல்
அறிவார் தொழில்” என்பதும், “மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்,
பிழையுயி    ரெய்தின்    பெரும்பே    ரச்சம்,   குடிபுர   வுண்டுங்
கொடுங்கோலஞ்சி,  மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல்,  துன்ப
மல்லது  தொழுதக  வில்”  (சிலப்.  வஞ்.  25  -  100 - 104) லெனச்
சேரமான்  செங்குட்டுவன் அஞ்சிக் கூறுவனவும் ஈண்டு நினைவுகூரத்
தகுவனவாம்.   வாய்மையிற்   றீராத  பொய்ச்  சொல்லும்  அரசியல்
வினைக்கு   வேண்டுமென்பதை,   “அறம்பொரு   ளின்ப   முயிரச்ச
நான்கின்,  றிறந்தெரிந்து  தேறப்படும்” (504) என்று திருவள்ளுவனார்
தெரிவிப்பதனாலறிக.

கழி  கண்ணோட்டம்போல் அன்பு மிகவுடைமையும் தீதா மாகலின்,
நட்டோரை  யளிக்குமிடத்து  இதன்  பயப்பாடு  கண்டு  விலக்கினார்.
அன்பு   தொடர்புடையார்   மேலும்,   கண்ணோட்டம்   தன்னொடு
பயின்றார்  மேலும்  செல்வன.  அன்பு மிக வுடையனாயவழி, அன்பு
செய்யப்பட்டார்   “கொளப்பட்டே   மென்றெண்ணிக்  கொள்ளாதன”
செய்து வேந்தனது கொற்றம் சிதைப்ப ராதலின், அன்பு மிக வுடைமை
தீதாய்   விலக்கப்படுவதாயிற்று.    சச்சந்தன்    கட்டியங்காரன்பால் 
அன்பு      மிகவுடையனாய்,       “எனக்  குயி ரென்னப்பட்டான்
என்னலாற்  பிறரை யில்லான்”      என்று    தன்      னரசினை
அவன்பால்    வைத்துக்கெட்ட    திறத்தைச்      சீவகசிந்தாமணி
தெரிவிப்பது காண்க.

தெறலாவது,     நெறி திறம்பியும் பகைத்தும் கொடுமை   செய்து
குற்றப்பட்டார்கண்  வேந்தன்  செய்ய  வேண்டுவது.  அத்  தெறலின்
கடுமையாவது    குற்றத்தின்   மிக்க   தண்டம்;   இது   கையிகந்த
தண்டமென்றும்   வழங்கும்.  கையிகந்த  தண்டம்,  “வேந்தன்  அடு
முரண்  தேய்க்கும்  அரம்” (குறள், 567) என்ப. குற்றங் காணுமிடத்து,
“மெய்கண்ட  தீமை  காணின்,  ஒப்ப  நாடி அத் தக வொறுத்”தலும்,
ஒறுக்குமிடத்தும்,  “கடிதோச்சி  மெல்ல” வெறிதலும் வேண்டுமென்பது
அரசியன்முறை.     இனிப்         பழையவுரைகாரர்,     “அச்சம்
பகைவர்க்கஞ்சுதல்”  என்றும்,  “அன்பு பொருண்மே லன்பு” என்றும்
கூறுவர்.