“பிறவும்” என்றது, இக் கூறியவை போல அரசர்க் காகா வென ஆன்றோரால் விலக்கப்பட்டன வெல்லாம் எஞ்சாமல் தழுவுதற்கு; அவற்றைத் திருக்குறள் முதலிய அற நூல்களுட் காண்க. இக் குற்றங்களை யுடையதாயின் அரசனீதி செல்லாது கெட்டழியும் என்பார், “அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது” என்றார். தீ தென்பதனை ஒவ்வொன்றிற்கும் தனித்தனிக் கூட்டுக. “கால்பார் கோத்து ஞாலத் தியக்கும், காவற் சாகா டுகைப்போன் மாணின், ஊறின் றாகியாறினிது படுமே, உய்த்தல் தேற்றா னாயின் வைகலும், பகைக்கூழள்ளற்பட்டு, மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே” (புறம். 185) என்று பிறரும் கூறுதல் காண்க. அறம் தெரி திகிரி - அறம் நிற்றற் பொருட்டு ஆராய்ந்து செலுத்தப்படும் அரசு முறை. வழி யடைப்பதை, “வழியடை” யென்றார். கழிசினம் முதலிய குற்றமும் பிறவுமாகிய தீது தம் அரசியலிலும், அது நிலவும் நாட்டிலும் அறவே இல்லையாகப் போக்கினமை தோன்ற, “சேணிகந்து” என்றார். என் றென்பது எஞ்சி நின்றது. தீது நீங்குவது நன்றேயென்றாலும், தாமும் அறம் பலவும் செய்தன ரென்பார் “நன்று மிகப் புரிந்து” என்றார். மிகப் புரிந்தது, அது நோக்கி நாட்டில் வாழ்பவர் தம் செம்மை நெறி கடவாது நிற்றற்கென வுணர்க. சினம் முதலியன மிக்க வழித் தீது பயத்தல் போல மிகச் செய்தவழி மிக்க நலம் பயத்தலின், “நன்று மிகப் புரிந்து” என்றெடுத் தோதினார். கடற்பயன் முத்தும் மணியும் பவளமு முதலாயின. கானம் உதவும் பயன் காடுபடு பொருள் பலவுமாம். தீதுசே ணீங்க நன்று மிகப் புரிந்து நிலவும் அரசியலால் கடலும் கானமும் பயன் பலவும் உதவுவன வாயின வென்றதற்கு, “கடலும் கானமும் பலபயம் உதவ” என்றார். கடலும் கானமு மொழிந்த நாட்டிடத்து நலம் கூறுதலுற்ற ஆசிரியர், நாட்டு மக்களின் செயல்நலம் காட்டுவாராய், “பிறர் பிறர் நலியாது” என்பது முதலியன கூறினார். நன்று மிகப் புரியும் அரசியல் நலத்தால் நாட்டில் வளம் மிகுதலின், செல்வக் களிப்பால் மையலுற்றுப் பிறர் பிறரை வருத்தியும், பிறர்க்குரிய பொருளை வெஃகியும் நெறி பிறழும் ஏனை நாட்டவர் போலாது, தெளிந்த அறிவும் செவ்விய நடையு மேற்கொண்டு இன்புற் றொழுகினரென்றற்கு, “பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது, மையிலறிவினர் செவ்வதினடந்து” என்றார். நலியாமைக் கேது வெஃகாமையும், அதற் கேதுமையில் அறிவுடைமையுமா மெனக் கொள்க. அறிவுடைமை சொல்லானும் செயலானும் வெளிப்படுமாயினும், சொல்லினும் செயல் சிறந்து தோன்றலின் அதன்மேல் வைத்துச் “செவ்விதின் நடந்து” என்றார். ஓதல், தூது, ஆள்வினை, நாடுகாவல், பொருள் என்ற இவை குறித்துப் பிரிவதல்லது தம்மை விரும்பி யுறையும் துணைவியராய மகளிரை அன்பு கண்ணறப் பிரிதல் அந் நாட்டவர்பால் இல்லை யென்பதற்கு, “தம் அமர்துணைப் பிரியாது” என்றார். பரத்தையிற் பிரிவு இவ்வாசிரியர் காலத்தே பிரிவாகக் கருதப்படுவ தன்றென் றுணர்க. “ஓதல் பகையே தூதிவை |