பிரிவே” (தொல். அகத். 25) என ஆசிரியர் தொல்காப்பியனாரும் பரத்தையிற் பிரிவை இவற்றோடு கூறாமை யறிக. பொருண்மிக வுடைமையின், பொருள் வயிற் பிரிவும், பகையின்மையின், தூதிற்பிரிவு ஆள்வினைப் பிரிவு நாடு காவற்பிரிவு முதலியனவும், மையிலறிவினராதலின், ஓதற் பிரிவும் இல்லா தொழிதலின் “பிரியாது” என்றார். இன்ப வொழுக்கத்துக் காமஞ் சிறப்பது குறித்துப் பரத்தையிற் பிரிதல் பிரிவாகாதாயினும், அதுதானும் செய்திலரென்றற்கு, “தம் அமர் துணைப் பிரியாது” என வற்புறுத்தினார். “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் இல்வாழ்வார் யாவர்க்கும் தலையாய கடனாதலின் “பாத்துண்” டென்றார். உண்ண வென்பது உண்டெனத் திரிந்துநின்றது. இசையாகிய பயனின்றிக் கொன்னே மூத்து விளியும் யாக்கை யென்றற்கு மூத்த யாக்கையென வாளாது கூறினார். “இசையிலா யாக்கை” (குறள். 229) என்று சான்றோர் கூறுவது காண்க. பிணியிலா வாழ்க்கை, வாழ்விற் பெறும் பேறுகளுள் சிறந்த பேறாதலின், “பிணியின்று கழிய” வென்றார்; “நோயின் றியன்ற யாக்கையர்” (முருகு. 143) என நக்கீரனார் பிணியிலா வுடம்பைப் பாராட்டி யுரைப்பது காண்க. இத்தகைய சிறப்புடைய மக்களை “மாக்கள்” என்றார், இன்பமும் துன்பமும் விரவிய வாழ்க்கையில், இன்பமல்லது காணாமையின். இனி மக்களெனற்பாலது விகாரத்தால் நீண்டதெனக் கோடலு மொன்று. இவ் வாழ்க்கை இத்துணைச் சிறப்புற்று விளங்குதற்கேது, கோடா அரசியலேயென வறிக. “யாண்டு பலவாகியும் நரையில்லை யாலோ” என்று வினவிய சான்றோர்க்கு, ஆசிரியர் பிசிராந்தையார் “வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்” (புறம். 191) என்றது ஈண்டுக் கருதத்தக்கது. இங்ஙனம் சீரிய முறையில் அரசு முறை நடாத்துவோர்க்கு இன்றியமையாது வேண்டப்படுவது சிறந்த அறிவு காரணமாகப் பிறக்கும் மனத்திண்மை யாதலின், அதனை யுடையோர் என்றற்கு “ ஊழி யுய்த்த உரவோர்” என்றார். உம்பல், வழித்தோன்றல். உரவோர் ஊழி யுய்த்த நலத்தால், கடலும் கானமும் பல்பயம் உதவலும், நாட்டு மக்கள் இசையின்றிக் கொன்னே மூத்து விளிதல் பிணியுடையராதல் இன்றி மேம்படுதலுமுளவாயின .என்பார், “பல் பயம் உதவ” என்றும், “மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய” வென்றும் பிரித்துக் கூறினார். 12 - 16. பொன்செய்..............தோன்றல். உரை : பொன் செய் கணிச்சி - இரும்பினாற் செய்த கோடரியால்; திண் பிணியுடைத்து - திண்ணிய வன்னிலத்தை யுடைத்துத் தோண்டப்பட்டபடியால்; சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல் சிதறுண்டு சிறிதே யூறிய நீர் பொருந்திய கிணறுகளில்; கயிறு குறு முகவை - நீண்ட கயிறு கட்டிச் சேந்தப்படும் குறுகிய முகவைகளை; மூயின மொய்க்கும் - நெருங்கச் சூழ்ந்து மொய்த்து நிற்கும்; ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த - ஆனிரைகளையுடைய கொங்கரது நாட்டைவென்று தன்னாட்டோடு அகப்படுத்திக் கொண்ட; வேல்கெழு தானை வெருவரு தோன்றல் - வேலேந்திய தானையால் பகைவர்க்கு அச்சத்தை விளைவிக்கும் தோன்றலே எ - று. |