பொன் னென்றது ஈண்டு இரும்பினை. இரும்பைக் கரும்பொன் என்றும் வழங்குப. கருங்கல் நிறைந்த வலிய நிலமாதல் பற்றி, வன்னிலத்தைத் “திண்பிணி” யென்றார். மண்ணுங் கருங்கற் பாறைகளும் கொண்டு இறுகப் பிணித்தது போறலின், வன்னிலம் பிணி யெனப்பட்டதெனினு மமையும். இந்நிலத்தை நீர் வேண்டி யகழுமிடத்து, கற்பாறைகள் ஒழுங்கின்றிப் பல்லாறாக உடைந்து சிதறி நீர் மிக வூறும் வாய்ப்பின்றி யிருப்பது தோன்ற, “சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தல்” என்றும், நீர் வாயாதவழிப் பத்தலிடத்தே முகவைகள் உளவாகா வாதலின், “நீர் வாய்ப் பத்த” லென்றும் கூறினார். சிரறுதல், ஒழுங்கின்றிச் சிதறுதல், “சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பு” (கலி. 88) என்றாற் போலச் சிரறுதல் வேறாத லென்றுமாம். வேறாதல், பிளந்து வேறாதல், “சிரறுதல் சிதறுத” லென்றும், “சிலவூறிய வென்றது பல்லூற்றொழியச் சில்லூற்றாக வூறிய வென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். “கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி, ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல்” (நற். 240) என்பதனால், பத்தல் உட்கிண றென்றும் கொள்ளப்படும். மேலே அகலமாக அகழ்வது கூவ லென்றும், அதனுள்ளே குறுகிய வாயுடைத்தாய ஆழமாய்த் தோண்டப்படுவது பத்த லென்றும் கொள்க. இப் பத்தலைப் பிள்ளைக் கிணறு என்றும் கொங்கு நாட்டவர் கூறுப. முகவை, நீர் முகக்கும் கருவி; இது மரத்தாற் செய்யப்படுவது. நீரின் சின்மை குறித்தும் நீரும் மிக்க ஆழத்திலிருப்பது பற்றியும் குறு முகவை கொள்ளப்பட்டது. பத்தல் இயல்பாகவே மிக ஆழ்ந்திருப்பதுடன் நாடோறும் சுரண்டுதலால் அவ் வாழம் மிகுந்தவண்ண மிருப்பதால், நீண்ட கயிறு கொண்டு முகத்தலல்லது இறங்கி முகந்து கோடல் கூடாமையின் கயிறு குறுமுகவை யென்றதற்கு, நீண்ட கயிறுகொண்டு நீர் சேந்தப்படும் குறுமுகவை யெனப் பொருள் கூறப்பட்டது. முகவையைக் குறுமுகவை யெனவே, கயிற்றையும் நீண்ட கயிறெனக் கோடல் வேண்டிற் றென்றுமாம். குறுமை, சிறுமை குறித்து நின்றது. நீர் கிடைத்த லருமையால் வேட்கை கொண்டலையும் ஆனிரைகள், முகவைகளைக் கண்ட மாத்திரையே அவற்றின் குறுமையும் நீரின்மையும் நோக்காது மொய்க்கின்றன வென்பார், “மூயின மொய்க்கும்” என்றார். அவ்வாறு மொய்ப்பனவற்றிற்குக் கொங்கர் நீர் முகந் துண்பிப்பரென்ற கருத்தால் முகவைகள் கயிற்றோடே கட்டிவைக்கப் பெற்றுள்ளனவென்பது இதனாற் பெறப்படும். இப் பொருட்சிறப்புப்பற்றி, இப் பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவ தாயிற்றென வறிக. இனிப் பழையவுரைகாரர், “தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித் தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குக் கயிறுகுறு முகவை யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் என்றது நீர் முகப்பது கருதியிடப்பட்ட முகவை நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் என்றும், இவ்வாறு கூறிய சிறப்புக் கருதியே இப் பாட்டு இத் தொடராற் பெயரெய்திற்றென்றும் கூறியவாறாம். இனி, கொங்கர் என்பவர் கொங்கு நாட்டவர்; இவரை “ஒளிறு வாட்கொங்கர்” (குறுந். 393) என்றும், “ஈரம்படைக் கொங்கர்”(பதிற். 73) என்றும் |