வாழும் நன்மக்களது பண்புடைமையினையே பாடாண்திணை என, ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் இனிது விளக்கியுள்ளார். சேரவேந்தர்களின் ஆற்றல்மிக்க ஒழுகலாறுகளைப் புலவர்கள் தம்பாடற்குரிய பொருளாகக்கொண்டு பாராட்டும் முறையில் இப்பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும் அமைந்துள்ளன. ஆகவே, இத்தொகையின்கண் அமைந்த நூறு பாடல்களும் பாடாண்திணை என்ற ஒரு திணையையே பொருளாகக்கொண்டு பாடப்பெற்றன எனக் கொள்ளலாம். “பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்திணையே ஆயிற்று” (தொல். புறம். 25 உரை) எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இவ்வுண்மையினை வலியுறுத்தல் காணலாம். இப் பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பாடலுக்கும் திணையமைதி கூறாது, துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றை மட்டுமே குறித்துச் செல்லுதற்கு இதுவே காரணமாதல் வேண்டும். இத்தொகையிற் சேரமன்னர்களைப் பற்றிய பாடல்களே தொகுக்கப் பெற்றுள்ளன. ஒரு குடியிற் பிறந்த வேந்தர் பலரைக் குறித்துத் தொடர்ச்சியாகப் புலவர் பலர் பாடிய செய்யுட்கள் காலமுறை தவறாது இத்தொகை யொன்றிலேதான் காணப்படுகின்றன. இந்நூல் சங்ககாலச் சேரவேந்தர் வரலாற்றைத் தொடர்ந்து எழுதுதற்குப் பெரிதுந்துணைபுரிவதாகும். இத்தொகையினைப் போன்று சோழர் பாண்டியர் என்பவர்களைப்பற்றிய பாடல்களைத் தொகுத்த வேறு தொகை நூல்களும் இருந்திருத்தல் கூடும் என எண்ண வேண்டியுளது. அத்தகைய தொகைநூல் எதுவும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரையும் பாராட்டுங் கருத்துடன் மூவேந்தருள் ஒவ்வொரு குடியினர்க்கும் தொள்ளாயிரம் தொள்ளாயிரம் புகழ்ப்பாடல்களமைய இடைக்காலத்தே அமைந்த நூல் முத்தொள்ளாயிரம் என்பதாகும். இதிலிருந்து மேற்கோள்களாக எடுத்தாளப்பெற்ற ஒருசில செய்யுட்களைத் தவிர ஏனைய இக்காலத்திற் கிடைத்தில. தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவாக அமைந்த முத்தொள்ளாயிரத்தைப் போலாது சேரமரபினர்க்கே சிறப்புரிமையுடையதா யமைந்த பதிற்றுப்பத்து என்னுந் தொகை நூல் சேரமன்னர்களின் ஆட்சிமுறை வரலாற்றுச் செய்திகளை நன்குணர்ந்த சேரநாட்டறிஞரொருவரால் தொகுக்கப்பெற்றிருத்தல் கூடும். பதிற்றுப்பத்துக்குப் பழையதோர் உரை யுளது. அப் பழையவுரை இல்லாவிட்டால் இத்தொகையிலுள்ள பாடல்களுக்குப் பொருள் காணுதல் என்பது எளிதின் இயலாத தொன்றாம். பழையவுரையினை இயற்றிய ஆசிரியர் பெயரும் காலமுந் தெரிந்து கொள்ள இயலவில்லை. அவ்வுரையில் |