பக்கம் எண் :

130

சான்றோர்     கூறுதலால், இவர்   படை வன்மையாற் புலவர் பாடும்
புகழ்  பெற்றவ  ரென்பது  விளங்கும். இவர் வாழும் நாட்டின் பெரும்
பகுதி  மென்புல  வைப்பின் நீர்நா டன்மையின், இவர்பால்  ஆனிரை
வளர்க்கும்  தொழில்  மிக்குநின்றது.  அதனால்,  இவரை  “ஆ கெழு
கொங்கர்”  என்றார்.  “கொங்கர்  படுமணி  யாயம்  நீர்க்கு நிமிர்ந்து
செல்லும், சேதா வெடுத்த செந்நிலப் பெருந்துகள்” (அகம். 79)  என்று
பிறரும்  கூறுதல்  காண்க.  இவரது  கொங்குநாடு சேரநாட்டைச் சேர
விருத்தலின்,  பலகாலும்  சேரர் இவர்களை வென்று இவர்  நாட்டைத்
தம்   நாட்டொடு   அகப்படுத்திக்   கொண்டுள்ளனர்.  அதுபற்றியே
சேரமன்னர்கள்,  “நாரரி  நறவின் கொங்கர் கோ” (பதிற். 87) என்றும்,
“கட்டிப்    புழுக்கிற்    கொங்கர்   கோ”   (பதிற்.   90)   என்றும்
பாராட்டப்படுவர்.  இக்  கொங்குநாட்டைத்  தாம்  கோடல் வேண்டிச்
சோழ  வேந்தரும்  பாண்டி  வேந்தரும்  போருடற்றி  யிருக்கின்றனர்.
சோழன்  குராப்பள்ளித்  துஞ்சிய  கிள்ளிவளவன் கொங்கரை வென்ற
திறத்தை,  “மைந்த  ராடிய  மயங்குபெருந்  தானைக்,  கொங்கு புறம்
பெற்ற  கொற்ற வேந்தே” (புறம் 373) என்றும், பசும்பூண்  பாண்டியன்
வென்ற  செய்தியை,  “வாடாப் பூவின் கொங்க ரோட்டி, நாடுபல தந்த
பசும்பூண்    பாண்டியன்”   (அகம்.   253)   என்றும்    சான்றோர்
கூறியிருத்தல்   காண்க.   இவ்வாறு  முடிவேந்தரே  யன்றிக் குறுநில
மன்னரும் இக் கொங்கரை வென்று கொள்ள முயன்றுள்ளனர். ஆஅய்
அண்டிர  னென்பான்  இம்  முயற்சியிலீடுபட்ட திறத்தை “கொங்கர்க்
குடகடலோட்டிய  ஞான்றை”  (புறம். 130) என்று சான்றோர் குறிப்பது
காண்க.    முடிவேந்தர்    மூவர்க்கும்   குறுமன்னர்க்கும்   விழைவு
தோற்றுவித்துப்   போருடற்றுதற்   கேதுவாகிய  நலம்  பல  வுடைய
கொங்கர்,  எக்காலத்தும்  போரை யெதிர்நோக்கி, அதற்கேற்ற போர்ப்
பயிற்சி  யுடையராயிருந்தமையின், அவரை முற்றவும் வென்று கோடல்
அரிதென்பது  தமிழக  முழுவதும்  அறிந்த செய்தியாயிற்று. ஆகவே,
அக் கொங்கரை வென்று அவர் தம் நாட்டை யகப்படுத்தற்குத் துணை
செய்த  தானையை, “வேல்கெழு தானை” யென்றும், இச் சேரமான்பல்
யானைச்   செல்கெழு  குட்டுவன்  அத்  தானையையுடையனாதலால்,
ஏனை     வேந்தர்க்கு     இவன்பால்   அச்சமுண்டாயிற்றென்பார்,
“வெருவரு தோன்றல்” என்றும் கூறினார்.

கணிச்சியால்     திண்பிணி யுடைத்துச் செய்த பத்தற்  கரைகளில்
மூயினவாய்  மொய்க்கும்  ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல்
கெழுதானையால் வெருவரு தோன்றல் என இயைத்து முடிக்க.

17 - 27. உளை...........குட்டுவ.

உரை : உளைப் பொலிந்த மா -  தலையாட்டத்தை     யணிந்து
விளங்கும்  குதிரைகளும்;  இழைப் பொலிந்த களிறு - இழை யணிந்து
விளங்கும்  யானைகளும்;  வம்பு  பரந்த  தேர் - தேர்ச் சீலைகளால்
விரிந்து  தோன்றும் தேர்களும்; அமர்க் கெதிர்ந்த புகல் மறவரொடு -
போருடற்றற்கென   முற்பட்ட   போரை   விரும்பும் வீரர்களுமாகிய
நால்வகைப்படையுடன் சென்று; மலர் அதன் பறந்தலை - பரந்தகன்ற
செண்டு  வெளியின்  எதிரே  நிற்கும்;  துஞ்சு மரம் துவன்றிய ஓங்கு
நிலை வாயில் - கணையமரம்