செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே; தூங்குபு தகைத்த - தூங்குமாறு கட்டிய; வில் விசை மாட்டிய விழுச் சீர் ஐயவி - வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய விழுமிய சிறப்புடைய ஐயவித் துலாமும்; கடிமிளை - காவற் காடும்; குண்டு கிடங்கின் - ஆழ்ந்த கிடங்கும்; நெடுமதில் நிரைப் பதணத்து - நெடிய மதிலிடத்தே நிரல்படவமைத்த பதணமும் உடைமையால்; அண்ணல் அம்பெருங்கோட்டு அகப்பா எறிந்த - பகைவருடைய தலைமையும் பெருமையும் பொருந்திய உயர்ந்த அகப்பா வென்னும் அரணை யெறிந்து வென்றி கொண்டதனால்; பொன் புனை உழிஞை - பொன்னாற் செய்த உழிஞை மாலை சூடிய; வெல்போர்க்குட்டுவ - வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே எ - று. மாவும் களிறும் தேரும் மறவரும் என்ற நாற்படையுடன் சென்று பறந்தலை கடந்து அகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவன் என இயையும். ஒடு, எண்ணொடு, உளை, தலையாட்டம்; குதிரையின் இரு செவிகட்குமிடையே நெற்றியிற் கிடந்து அழகு செய்வது. உளை யென்பது பிடரிமயிருக்கும் பெயராய் வழங்கும்; “விரியுளைக் கலிமான் தேரொடு வந்த விருந்து”(கலி. 75) என்பதன் உரை காண்க. இழை யென்றது பொன்னரி மாலையும் ஓடையுங் கிம்புரியும் பிறவுமாயினும், சிறப்புடைய பொன்னரி மாலையே ஈண்டு இழையெனப்பட்டது. இவ்வாறு குதிரைக்கு உளையும் களிற்றுக்கு இழையும் அழகு செய்தல் பற்றி, “உளைப் பொலிந்தமா இழைப் பொலிந்த களிறு” எனச் சிறப்பித்தார் வம்பு, தேர்ச்சீலை. அமர்க்கெதிர்ந்த வழியும், ஆடவர்க்கு அவ் வமரின்பால் உள்ளம் செல்லாதாயின், உயிர் காத்தலொன்றே பொருளாகக் கொண்டு மறம் வாடுவராதலால், ‘அமர்க் கெதிர்ந்த’ வென்றதனோ டமையாது “புகல் மறவரொடு” என்றார். ஒடு, உயர்பின் வழிவந்த ஒருவினை யொடு. அமரெனின் அதனை ஆர்வத்தோடு ஏற்று ஆற்றுதற்குச் செல்லும் அவரது விரைவு தோன்ற, “எதிர்ந்த” வென இறந்த காலத்தாற் கூறினார். இனி, குட்டுவன் அகப்பாவை யெறிந்த செய்தி கூறலுற்ற ஆசிரியர், அதன் அமைதியினைத் தெரித்து மொழிகின்றார். அகமதிலைப் பற்றச் செல்வோர் அதன் எதிரேயுள்ள செண்டு வெளியில் காத்தூன்றும் பகைவீரரை வென்றுகொண் டேக வேண்டுதலின் அங்கே போர் நிகழ்வது கண்டு, அதன் பரப்பும் விளங்க “மலரகன் பறந்தலை” யென்றார். மலரகல் என்பது மீமிசை போல ஒரு பொருள்மேல் நின்றது. கோயிலிடத்தேயுள்ள முரசு முழங்கும் முற்றம்போல அகமதிலின் புறத்தே அதற்கு முற்றமாய் மூலப் படையிருந்து போர் முரசு முழக்கும் வெளியைச் செண்டுவெளி யென்ப. செண்டாட்டயரும் இடமாதலின் இதனைச் செண்டுவெளி யென்பது வழக்கு. அகமதிலைக் கொள்வோரும் காப்போரும் கலந்து போர் செய்தலின், இதனையும் பறந்தலை யென்றாரென வறிக. இவ் வெளி அகமதிற்கும் புறமதிற்கும் இடையே அகழியை யணைந்து கிடக்கும் வெளியிடம். துஞ்சுமரம், கணையமரம், “துஞ்சு மரக்குழாம் துவன்றி” (பதிற். 16) என்புழியும், “மதில் வாயிலில் தூங்கம் கணையமரம்”என்பர் பழைய |