பக்கம் எண் :

134

பாழாகும்  பெரிய  பாழ்நிலமாய்  விடும்; தாம் அளிய - அவை தாம்
அளிக்கத்தக்கன எ - று.

புதுப்புனல்     மிக்குக் கரையை  யுடைத்துப்  பெருகி வருங்கால்,
உடைமடையைக்   கட்டுதற்குப்   பறையை   யறைந்து  கடையரைத்
தருவித்துத்  தொகுத்தல் பண்டையோர் மரபாதலால், “போர்த்தெறிந்த
பறையால்  புனல் செறுக்குநரும்” என்றார்.  புனலடைக்கும் குறிப்பைத்
தன்னோசையால்  தெரிவித்தற்குப் பறையே யேற்ற தாதலால் அதனை
விதந்தோதினார்;   “ஓர்த்த   திசைக்கும்  பறை”  (கலி.  92)  எனச்
சான்றோர்  கூறுவது  காண்க.  “போர்த்தெறிந்த பறை” யென்றதனால்,
பழைய தோலை நீக்கிப் புதுத்தோல் போர்த்து முழக்கினமை பெற்றாம்.
நீர்த்தரு  பூசல்  - நீர் விளையாட்டின்கண் எழும் ஆரவாரம்.  அம்பு,
ஆகுபெயரால்  அம்பும்  வில்லும்  கொண்டு  விற்பயிற்சி செய்வாரின்
பூசலுக்காயிற்று.  புனல் செறுக்குநரும், புனல் விளையாட்  டயர்வாரும்
தம்மில்   ஒருங்குகூடி   மகிழ்தற்கு   இடம்  கூறுவார்,  “ஒலித்தலை
விழாவின்  மலியு”  மென்றார்.  புனல்  செறுக்குநர்  உழவ  ரென்றும்,
புனல்     விளையாட்    டயர்வோர்    உழுவிப்போரும்    ஏனைச்
செல்வருமென்றும் கொள்க. இருதிறத்தோரும் வேற்றுமையின்றிக்   கூடி
மகிழும் இடம் விழாவாயிற்று. இனி, “நீர்த்தருபூச லினம்பழிக்  குநரும்”
என்றுகொண்டு,  நீர் விளையாட் டயர்வார் வில்லும் அம்பும் கொண்டு
போருடற்றும்  மன்னர்  போலத் தம்முள் அணிவகுத்து நின்று சிவிறி
கொண்டு    நீரெறிந்து    பொரும்    விளையாட்டில்   ஒருதிறத்தார்
மறுதிறத்தாரைப்     பழிப்பவரும்    என்றும்,    நீர்    கொணரும்
ஆரவாரத்தின்கண்    விரையக்கூடிச்    செய்வன    செய்யாதாரைத்
தெழித்தும்  உரப்பியும்  வினைசெய்விப்போரும்  என்றும்  உரைத்தலு
முண்டு.  பறையினை  யெடுத்து  மொழிந்தாரேனும்  ஏனைப்  பம்பை
முதலிய    பிற   இசைக்கருவிகளும்   கொள்ளப்படும்;   “தழங்குரற்
பம்பையி்ற்   சாற்றி   நாடெலாம்,   முழங்குதீம்   புனலகம்   முரிய
மொய்த்தவே”  (சீவக.  40) என்று சான்றோரோதுதல் காண்க; நாளும்
புதுமை  விருப்பமுடைய ராதலின்,  “யாணர் நாடு” என்றார்; “நாளும்
புதுவோர் மேலவன்”(ஐங்.  17)  எனச்  சான்றோர்  கூறுவது  காண்க.
யாணர்,  புதுமை.ஆகுபெயரால் புது வருவா யெனினுமமையும்.

“நாடு     கெழு தண்பணை பெரும்பா    ழாகுமன்” என்பதனால்,
அந்நாடு பகைவர் நாடாயிற்று. அது பாழாகு மென ஆசிரியர் இரங்கிக்
கூறுதற்  கேது,  குட்டுவன்  அப்  பகைவர்பால்  கொண்ட  பகைமை
காரணமாகப்  பிறந்த  செற்றமாதலின்,  “சீறினை  யாதலின்” என்றார்.
நாடு  பாழாகு  மென்னாது,  “தண்பணை” யெனச் சிறப்புறக் கூறியது,
ஏனை  நாடுகளை  நோக்கச்  சேரநாட்டில் தண்பணை  அரிதென்றும்,
அஃது  அழியற்பால தன்றென்றும், அரசரது பகைமை அவர் நாட்டை
யழிக்கின்றதென்றும்  ஆசிரியர்  உள்ளக்குறிப்பைப் புலப்படுத்துகிறது.
மாய்தல்,  மறைதல்  ஞாயிறு  குடபான்  மறைந்ததும், உலகில் இருள்
பரந்து, பயன்படும் வினை நிகழாவாறு மறைத்து விடுதலாலும், கீழ்பால்
ஞாயிறு  தோன்றித்  தன்  வெயி  லொளியை  உமிழ்தலுறின், வினை
பலவும்    இனிது    நிகழ்தலாற்   பயனுறுவித்தலாலும்   ஞாயிற்றை,
“பயங்கெழு பண்பின் ஞாயிறு” என்றார்.    இக்        காலத்திலும்
ஆராய்ச்சியாளர் ஞாயிற்றின் பயன்களை மிகவிரித்துக் கூறுவர். இனி,