பயங்கெழு பண்பின் ஞாயிறு என்றோதி, அது குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியதனால், அம் மாய்தலும் பாயிருள் பரவுதலும் பயன் குறித்து நிகழ்வனவே யென்பதும் கருத்தாகக் கொள்க. பகற்காலத்தே வினைவழி யுழந்தோயும் உயிர்கட்குத் தன் மறைவால் இரவுப்போதெய்துவித்து உறக்கமென்னும் உயிர் மருந்தால் ஓய்வகற்றி யூக்கம் கிளர்வித்தலின் ஞாயிற்றின் மறைவும் பயனுடைத்தாதல் உணரப்படும். இவ்வாறு கொண்டுரையாக்கால் குடதிசை மாய்தலும் குணமுதல் தோன்றலும் கூறியது சொற்பல்குத லென்னும் குற்றமா மென வறிக. ஒருமருங்கும் சாயாமல் வான நடுவே ஞாயிறு நிற்ப. அதன் ஒளிக்கதிர் செவ்வே யொழுக விளங்கும் நண்பகற் போதினை, “ஞாயிறு” கோடா நன்பகல்” என்றார். தனக்கு வேண்டும் இரையை முயன்று தேடும் மதுகையில்லாத குறுநரி பசிப்பிணியாற் கவலை யெய்தும் இயல்பிற்றாதலின், “கவலை வெண்ணரி” என்றும், அந்நரியும் தனித்தின்றிப் பலவாய்க் கூடி யாமத்திற் கொருமுறை கூவுதல் என்ற முறைமைப்படியே கூவும் என்றற்கு, “கூழூஉமுறை பயிற்றி” என்றும் கூறினார். பயிற்றி என்பதனைப் பயிற்றவெனத் திரிக்க. வெண்மை, நிறஞ் சுட்டாது குறுமையும் வலியின்மையும் சுட்டிநின்றது; செவ்விய அறிவிலாரை வெள்ளறிவினர் என்பது போல. கண்கள் பிதுங்கி வெளி வருவது போறலின், “கழல்கட் கூகை” என்றார்; நக்கீரரும், “கழல்கட் கூகை”(முருகு. 49) என்பர். வெண்ணரி முறை பயிற்றி முழவு போல் கூவும் கூக்குரற் கேற்பக் கூகை குழறுதலால் அதன் குரல் தாளங் கொட்டுவது போல வுளதென்பார், “குழறு குரல் பாணிக்கு” என்றார். நரியின் குரல் முழவு போலு மென்பதனை, “வெவ்வா யோரி முழவாக” (சீவக. 309) என்பதனா லறிக. நரியின் முழவோசையும் கூகையின் குரற் பாணியும் கேட்டதும் பேய்மகள் கூத்தாடுகின்றாளென்பார், “கருங்கட் பேய்மகள் வழங்கும்” என்றார். கருங்கண், பெரிய கண், பழையவுரைகாரர் கொடிய கண்ணென்பர். அவர் “வழங்குதல் ஆடுதல்” என்றும் கூறுவர். இங்கே கூறப்பட்ட கருத்தே, “வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு, பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல, பேஎய் மகளிர் பிணந் தழூஉப் பற்றி, விளரூன்தின்ற வெம்புலான் மெய்யர், களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி” (புறம். 359) என்று பிறரும் கூறுதல் காண்க. மருதத் தண்பணைக்கண் நண்பகற் போதில் வெண்ணரி கூவுதலும் கூகை குழறுதலும் பேய்மகள் ஆடுதலும் நிகழா வாகலி்ன், பாழ்பட்ட நிலத்திற் குரிமை கூறுவார், “பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமன்” னென்றார்; “சிறுவெள் ளென்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப், பகலுங் கூவு மகலுள்” (புறம். 362) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பெரும்பாழாகுமன் என்றது, மீளவும் பண்படுத்திச் சீர் செய்யலாகாமை தோன்றநின்றது. மன், இரக்கப் பொருட்டு, விரைவிற் பாழ்பட விருப்பது நினைந்து கூறுதலின், “அளிய” என்றார். தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றதாம். தீது சேணிகந்து, நன்றுமிகப் புரிந்து மக்கள் பிணியின்று கழிய, ஊழி யுய்த்த உரவோ ரும்பல், கொங்கர் நாடு அடிப்படுத்த வேல்கெழுதானைத் தோன்றல், அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த வெல்போர்க் குட்டுவ, நீ நாடுகெழு தண்பணை சீறினையாதலின், இனி அவை பேய்மகள் |