பக்கம் எண் :

139

“தெண்கள்     வறிகூட்    டரிய  லிரவலர்த் தடுப்ப, தான்தரவுண்ட
நனைநறவு   மகிழ்ந்து”   (பதிற்.  43)  என்றும்,  “நாட்கள்  ளுண்டு
நாண்மகிழ்  மகிழின்,  யார்க்கு  மெளிதே  தேரீ  தல்லே, தொலையா
நல்லிசை  விளங்கு  மலையன்,  மகிழா தீத்த விழையணி நெடுந்தேர்,
பயன்  கெழு  முள்ளூர்  மீமிசைப்  பட்ட,   மாரியுறையினும் பலவே”
(புறம்.  123)  என்றும்  சான்றோர்  கூறுமாற்றா  லறிக. சிறுமகிழ், சிறு
உண்டாட்டுச் சிறப்பென்றுமாம்.

புலங்கெடு   காலையும், சிறு மகிழானும் என நின்ற உம்மை சிறப்பு.
எனவே, பெருங்கலம் நல்காமைக்குரிய காலமும் காரணமும் உளவாகிய
வழியும்  அவற்றை   நோக்காது,  அடைந்தார்  பசித் துன்பம் நீக்கும்
பண்பு இச் சேரமான்பால் சிறந்து நிற்றல் இதனால் தெரிவித்தாராயிற்று.

18 - 25. மருதிமிழ்ந் தோங்கிய............நாடே.

உரை : மருது இமிழ்ந் தோங்கிய - மருத மரங்கள் தம் பால் பல
புள்ளினம்  தங்கி  யொலிக்க  வோங்கி நிற்கும்; நளி இரும் பரப்பின்
செறிவினையுடைய பெரிய பரப்பிடமாகிய; மணல் மலி பெருந் துறை -
மணல்  மிக்க  பெருந்துறைக்கண்;  ததைந்த  காஞ்சியொடு  சிதைந்த
காஞ்சி  மரங்களுடன்;  முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடை
கரை  -  முருக்க  மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரிதலால் உயர்ந்த
நெருப்புப்  போலத்  தோன்றும்  அடைகரையில்;  நந்து நாரையொடு
செவ்வரி    உகளும்    -    சங்குகளும்   நாரைகளும்   செவ்விய
வரிகளையுடைய  நாரையினத்துப்  புள்ளினங்களும்  உலவும்;  கழனி
வாயில் பழனப் படப்பை கழனிகட்கு வாயிலாக வுள்ள பொய்கையைச்
சார்ந்த  விளைநிலத்தில்;  அழல் மருள் பூவின் தாமரை - நெருப்புப்
போலும்  பூவினையுடைய  தாமரையும்;  வளைமகள்  குறாது மலர்ந்த
ஆம்பல் - வளையணிந்த விளையாட்டுமகளிர் பறிக்காமையால் தானே
மலர்ந்த ஆம்பலும்; அறா அ யாணர் - நீங்காத புது வருவாயுமுடைய;
அவர்   அகன்றலை   நாடு   -   அப்   பகைவருடைய   அகன்ற
இடத்தையுடைய நாடுகள் எ - று.

பெருந்துறைத்    ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய
அடைகரையில்   நாரையொடு   செவ்வரி   உகளும்  படப்பைக்கண்
தாமரையும்  ஆம்பலும் அறாயாணருமுடைய அவர் அகன்றலை நாடு
காடாயின  எனக்  கூட்டி முடிக்க. பகைவரது நாடு மருதவளஞ் சான்ற
மாண்புடைய   நாடு   என்பது,  “மருதிமி்ழ்ந்  தோங்கிய  நளியிரும்
பரப்பின்”   என்பதனாற்   பெறப்படும்.   கிளி   முதலிய  புள்ளும்
வண்டினமும்  இனிதிருந்து மகிழும் நன்மரம் என்றற்கு, “மருதிமிழ்ந்”
தென்றார்.  சிறப்புடைய  மருதினைக்  கூறினமையின்,  ஏனை மாவும்
தெங்கும்  பிறவும்  கொள்ளப்படும். இவற்றாற் செறிவும், இடப்பரப்பும்
ஒருங்குடைமை  தோன்ற, “நளியிரும் பரப்பெனச் சிறப்பித்துரைத்தார்.
பரப்பினையுடைய  பெருந்துறை  யென்றுமாம்.  முன்னைய முடிபிற்கு
இன்னென்பது    சாரியை.   பெருந்துறைப்   பரப்பில்   நிற்பனவும்
நிகழ்வனவும்  கூறி, அதன் நில வியல்பை மணல் மிக்க துறையென்று
கூறினார்.