சின்னூல் என்னும் ஒரு நூற்பெயர் காணப்படுவதுகொண்டு அப்பெயரால் வழங்கப்படும் நேமிநாதநூலை இயற்றிய குணவீரபண்டிதர்க்குப் பின்னர் இவ்வுரையாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என இந்நூலை முதன் முதற் பதிப்பித்த மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் கருதுகின்றார்கள். இவ்வுரையாசிரியர் இந் நூலிலுள்ள அருஞ்சொற்களுக்கும் தொடர்களுக்கும் பொருள்கூறியும் சொன்முடிபு பொருண் முடிவுகாட்டியும், ஒவ்வொரு பாடலுக்குமுரிய துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றின் அமைதியைப் புலப்படுத்தியும் இடையிடையே பாட்டின் சுவைநலங்களைச் சுருக்கமாக விளக்கியும் இலக்கணக்குறிப்புக்கள் தந்தும் இறுதியில் கருத்துரைத்தும் பாடல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புக்களைச் சிறிது புலப்படுத்தியும் இந்நூற் பொருளைத் தெளிவுபடுத்துகின்றார். அன்றியும் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அதனாற் பாடப்பெற்ற சேரமன்னரது செயல்முறைகளையும் அவரைப் பாடிய புலவர் பெற்ற வரிசையினையும் குறித்துப் பாடப்பெற்ற பதிகத்தை அமைத்து அப்பதிகங்களுக்கும் விளக்கந்தருகின்றார். இவ்வுரை, புறநானூற்றுரையினைப் போன்று பொழிப்புரையாகவோ, சிலப்பதிகார அரும்பதவுரைபோன்று சுருக்கமாகவோ அமையாது, இடைப்பட்டதாகவுளது, அரும்பதங்களுக்கு உரைகூறுவதுடன் இன்றியமையாத இடங்களுக்குப் பொருள் விளக்கமும் தந்து செய்யுளில் அமைந்த தொடர்களை முடித்துக் காட்டும் நிலையில் இப்பழையவுரை யமைந்துளது போதிய அளவு தமிழ்நூற் பயிற்சி யுடையார்க்கு அரிய சொற்பொருள்களையும் சொன் முடிபு பொருண்முடிபுகளையும் சுருக்கமாகத் தெளிவிக்கும் நிலையில் அமைந்ததே இப்பழையவுரையாகும். சுருங்கக் கூறுவோமானால் பதிற்றுப்பத்தினைப் பாடஞ் சொல்லும் ஆசிரியர்களுக்குப் பொருளுணர்ச்சிக்கு வேண்டும் வழி துறைகளை நன்றாக வகுத்துக் கொடுப்பது இப் பழையவுரை யெனலாம். பதிற்றுப்பத்து மூலத்தைக் கருத்தூன்றியுணர்தற்கு வேண்டும் நூற் பயிற்சியுடையவர்களே இப்பழையவுரையின் நுட்பத்தினையுணர்ந்துரைக்கும் திட்பமுடையோராவர். இப் பழையவுரையின் துணைகொண்டு பதிற்றுப்பத்தினைப் படித்துணரும் வன்மையில்லாதார் சிலர் இந்நூற் பொருளை யாராயத் தொடங்கித் தம் மனம் போனவாறு எழுதிய பிழையுரைகள் பலவாம். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காட்டுதும்: ‘சேரர் வஞ்சி’ என்னும் நூலுடையார் ஐந்தாம்பத்தின் முதற் பாடலில் “தெவ்வர் மிளகெறியுலக்கையின் இருந்தலை யிடித்து” என வருந் தொடர்க்குப் “பகைவேந்தர் தலைகளை உலக்கையினாற் குற்றப்பட்ட மிளகினைப் போலச் சிதறும்படி செய்து” எனப் பொருள் கொள்ள அறியாது மிளகைக் குற்றும் உலக்கையினையே படையாகக் கொண்டு பகைவேந்தர் தலைகளைத் தாக்கி |