மாவும் மாக்களும் வழங்குதலால் பூ முதலியனவின்றி மணலே விளங்கித் தோன்றுமாறு காட்டுவார், “மணல்மலி பெருந்துறை” யென்றார். காஞ்சியும் முருக்கமரம் போலத் தாழ நின்று மாலை போலப் பூக்கம் இயல்பிற்றாதலின், அதன் பூவும் தளிரும் விளையாட்டு இள மகளிரால் பறிக்கப்படுதலால், “ததைந்த காஞ்சி” யென்றும், முருக்கம் பூ அவ்வாறு கொள்ளப்படுவ தன்மையின், அது வீழ்ந்து கிடக்குமாறு தோன்ற “முருக்கத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை” யென்றும் கூறினார். ததைதல், சிதைதல்; “அருஞ்சமந் ததைய நூறி” (புறம். 18) என்றாற்போல. பழையவுரைகாரர், “ததைந்த காஞ்சி யென்றது, விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதும் பூவும் கோடலாற் சிதைவு பட்டுக் கிடக்கின்ற காஞ்சியென்றவா”றென்றும், “இச் சிறப்பானே இதற்குத் ததைந்த காஞ்சி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். அடைகரை துறை யன்மையின், அங்கே முருக்கின் கிளை தாழ்ந்து பூக்களைச் சொரிதலால், அப் பூக்களே பரந்து கிடத்தலாலும் அவற்றின் நிறம் நெருப்புப்போன் றிருத்தலாலும், “நெருப்புறழ் அடைகரை” யென்றும், முருக்க மரங்கள் மிக வோங்கி வளராது தாழ நின்று கிளை பரந்து நெருப்பெனப் பூத்துள்ள பூக்களைச் சொரிதலால் அடைகரை நீரும் நெருப்பும் தம்முள் உறழ்ந்து காட்சி வழங்குவது போறலின் “முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை” யென்றும் குறித்தார். முருக்கம்பூ நெருப்புப்போல்வ தென்பதனைப் பிறரும், “பொங்கழல் முருக்கினொண்குரன் மாந்திச், சிதர் சிதர்ந் துகுத்த செவ்வி” (அகம். 277) என்பர். நீர் இடையறாமையின் தமக்கு வேண்டும் இரையை நிரம்பப் பெறுதலின், ஆக்கமுறும் நாரை யினத்துடன் செவ்வரி யென்னும் நாரை யினமும் கலந்துறையும் என்பார். “நந்து நாரையொடு செவ்வரி யுகளும்” என்றார்; “பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை” (புறம். 351) என்பதனால், செவ்வரி நாரையாதல் காண்க. பழனம் கழனிக்கு வாயில் போறலின், “கழனிவாயிற் பழனம்” என்றார்; “வயலமர் கழனிவாயிற் பொய்கை” (புறம். 354) எனப் பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழனத்தின் வாயிலாகக் கழனிக்கு நீர் பாய்தலின் இவ்வாறு கூறினா ரென்றுமாம். பழனத்தைச் சார்ந்த படப்பைக்கண் தாமரை மிக்கிருத்தல் தோன்றப் “பழனப் படப்பை யழன்மருள் தாமரை” யென்றார். படப்பை, பழனத்தைச் சார்ந்த தோட்டக்கால். படப்பையில் மலர்ந்த தாமரைப்பூவைப் பறித்துத் தலையிற் சூடி அதன் நாளத்தை வளையாக அணிந்து மகளிர் விளையாடுபவாகலின், அவ்வாறு விளையாடும் இளமகளை “வளைமகள்” என்றும், அவள் பழனத்தில் மலர்ந்த ஆம்பலைப் பறிக்கமாட்டாது விடுப்ப அது தானே மலரும் என்பார் “குறாது மலர்ந்த ஆம்பல்” என்றும் கூறினார். விளையாடும் பருவத்து இளமகளிரை “வளையவ” ரென்பது பண்டையோர் வழக்கு; “வளைபவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள்” (கலி. 29) என்ற விடத்து, வளையவர் என்றதற்கு நச்சினார்க்கினியர் “வளையினையுடைய இளையோர்” என்றுரைப்பது காண்க. இவ் வளைமகள் குறுதற் கெட்டுமளவி லிருப்பின், நீரிடத்தே அதனை மலரவிடாது பறித்திருப்பள் என்றவாறு, பழையவுரைகாரரும் |