பக்கம் எண் :

141

“வளைமகள்     குறாஅது  மலர்ந்த ஆம்பல் என்றது, விளையாட்டு
மகளிர்  குறுதற்  கெட்டாமையாலே  மலர்ந்த  ஆம்பல்  என்றவாறு”
என்பர்.  இன்ன  புது நலங்கள் இடையறாத நாடுகள் என்றற்கு “அறா
அ யாணர்” என்றார்.

இனி,     அவர் நாட்டு இளையவர்  மலர்ந்த தாமரையைப் பயன்
கொண்டு  குவிந்த  ஆம்பலை  வாளாது விடுவ ரென்றது, செல்வத்திற்
சிறந்தாரைப்  பயன்கொண்டு மெலிந்தாரைப் புறக்கணித்தனர்; அதுவும்
அவர்   நாட்டழிவுக்குக்  காரணமா  மென்பது  கூறியதாகக்  கொள்க.
வளையோர்    மலர்ந்த   தாமரையைப்    பயன்கொண்டது   போல,
இந்நாட்டரசராகிய   பகை   வேந்தர்   நின்னை   வணங்கிப்  பயன்
கொள்ளாது,   மகளிர்  தமக்கெட்டாத  ஆம்பலைக்  குறாது  விட்டது
போலத்  தமக்  கெய்தலாகாத வென்றியை யெய்த முயன்று கெட்டனர்
என வேறோ ரேதுக் காட்டி நின்ற தெனினுமாம்.

11 - 17. நின்னயந்து.................ஒராலின்.

உரை : நின் மைந்து மலி பெரும் புகழ் அறியார் -நினது வலியால்
நிறைந்த புகழ் நிலையை யறியாராய்; போர் எதிர் வேந்தர் நின்னொடு
பொருதலை  யேற்று  எதிர்நின்  றழிந்த  பகைவேந்தர்; தார் அழிந்து
ஒராலின்  -  நின்  தூசிப்  படைக்  குடைந்து  ஓடுதலால்; வழங்குநர்
அற்றெனப்   புல்   மருங்கு   கெடத்  தூர்ந்து  -  மக்கள் போக்கு
வரவற்றபடியால்  புல் நிறைந்து சிற்றிடமுமின்றி முட்செடிகள் மண்டித்
தூர்ந்து;  பெருங்  கவின்  இழந்த  -  தமது பெரிய அழகை யிழந்த;
ஆற்ற  -  வழிகளையுடையவாய்; விண்ணுயர் வைப்பின - வானளாவ
உயர்ந்த   நெடுநிலை  மாடங்கள்  பொருந்திய  வூர்கள்;  அண்ணல்
மரையா  ஏறு  புணர்ந்துறையும் காடாயின - பெரிய காட்டுப் பசுக்கள்
ஏறுகளுடன்  கூடி  யுறையும்  காடுகளாயின;  நின்  நயந்து வருவேம்
கண்டனம்   -   நின்னைக்   காண்டலை   விரும்பிவரும்  யாங்கள்
அவற்றைக் கண்டேம் எ - று.

அகன்ற  நாடுகள், பெருங்கவின் இழந்த ஆற்றவாய்க் காடுகளாயின
வென்க.   மைந்து   -   வலிமை.  மைந்துடையார்க்கே  போர்ப்புகழ்
மிகவுண்டாகுமாதலின்,  “மைந்துமலி  பெரும்புகழ்”  என்றும், இதனை
முன்பறிந்தாரேல்  பகைவர் போரில் எதிர்தலைக் கருதியிரார் என்பார்,
“அறியார்   மலைந்த   போரெதிர்   வேந்தர்”   என்றும்  கூறினார்.
நின்னுடைய    அகப்படையும்   மூலப்படையும்   காணாது   தூசிப்
படையினை   யெதிர்ந்த   அளவிலே   ஆற்றாது  உடைந்தமையின்,
“தாரழிந்  தொராலின்” என்றார். தார் என்புழி நான்கனுருபு தொக்கது.
இனி,   தாரென்றது  பகைவரது  தூசிப்படையாக்கி,  பகைவர்  தமது
தூசிப்படை    யழிந்து    உடைந்தோடினமையின்   என்றுரைப்பினு
மமையும்.  தாரழிந்  தொராலின் என்றதற்கு, தாரும் குடையும் முரசும்
பிறவும்   இழந்தனரெனக்   கோடலுமொன்று.  எனவே,  நின்னுடைய
மைந்துமலி   பெரும்   புகழ்   அறியாது  பகைவர்  செய்த  குற்றம்
அவர்கட்கு   இக்   கேட்டைப்   பயந்ததோடு   அவர்  நாட்டையும்
பாழ்படுத்திற்  றென்பார், “அவர் அகன்றலை நாடு காடாயின” என்று
இரங்கிக் கூறினார்.