அடைநலத்தால், பெருமை படையினது மிகுதி மேற்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “தாரருந் தகைப்பின் பீடு கொள் மாலைப் பெரும்படை யென்றது, தார்ப் படைக்கு அழித்தற் கரிய மாற்றார் படை வகுப்பிலே வென்றி செய்து பெருமை கொள்ளும் இயல்பையுடைய அணியாய் நிற்கும் பெரும்படை யென்றவா” றென்பர். படையெனவே, அணிநிலையும் தொகை மிகுதியும் கருவிப் பெருமையும் வினைத் தூய்மையும் பிறவும் அகப்படுதல் காண்க. இப்பெரும் படையை இதன் பெருமைப்பண்பு குன்றாத வகையில் வைத்தாளுந்திறன் தலைமைப் பண்பு முற்றும் நிரம்ப வுடையார்க் கன்றியின்மையின், பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் “பெரும்படைத் தலைவ” என்றார். திருவள்ளுவனாரும், “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி இல்” (குறள். 770) என்பது காண்க. மேலும், குட்டுவனை, பெரும்படை வேந்தே யென்னாது “தலைவ” என்றதனால், அவன் படையினை யேவி யிராதே அதற்குத் தானே முன்னின்று தலைமை தாங்கிப் பொருது பீடு கொள்ளும் செயலுடைய னென்பதும் உய்த்துணரப்படும். 6 - 11. ஓதல்............கணவ. உரை : ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந் தொழுகும் - மறை யோதுதல், வேள்வி வேட்டல், அவையிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க்கொன்றீதல், தமக்கொருவர் கொடுத்ததை யேற்றல் என்ற தொழி லாறும் செய்தொழுகும்; அறம் புரி அந்தணர் - அறநூற் பயனை விரும்பும் அந்தணர்களை; வழி மொழிந்தொழுகி - வழிபட் டொழுகி; ஞாலம் நின் வழி யொழுக - அதனால் உலகத்தவர் நின்னை வழிபட்டு நிற்ப; பாடல் சான்று - புலவர் பாடும் புகழ் நிறைந்து; நாடு உடன் விளங்கும் - நில முழுதும் பரந்து விளங்கும்; நாடா நல்லிசை விளங்கிய நல்ல புகழையும்; திருந்திய இயல் மொழி - அறக் கேள்வியால் திருந்திய இனிய இயல்பிற் றிரியாத மொழியினையுமுடைய; திருந்திழை கணவ - திருந்திய இழையணிந்தவட்குக் கணவனே எ - று. ஓதுவித்தலும் வேட்பித்தலும் அந்தணர்க்குரிய தொழில் ஆறனுள் அடங்குவனவாதலின், “அவை பிறர்ச் செய்தல்” என்றார். செய்தல்: பிறவினைப்பொருட்டு. செய்தல், செய்வித்தல் என்ற வினைவகைகளுள் செய்தல் வகை நான்கினையும் முன்னும் பின்னும் கூறலின், இடையே செய்வித்தல் வகை இரண்டனையும் ஒன்றாய்த் தொகுத்துரைத்தார், சொற்சுருங்குதல் குறித்து. பழையவுரைகாரர், “அவை பிறர்ச் செய்தல் என்புழிப் பிறரையென விரியும் இரண்டாவதனை, அவை செய்தல் என நின்ற செய்தலென்னும் தொழிலாற் போந்த பொருளால் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனொடு முடிக்க” என்றார். என்று என்பதனை எல்லாவற்றோடும் ஒட்டுக. ஆறென்புழி முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இவ்வாறு தொழிலையும் வழிவழியாக வருத்தமின்றிக் கற்றுப் பயின்று |