ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக்கட்டையும் கண்டு - பார்த்த துணையானே; யாவரும் மதிமருளும் - யாவரும் அறிவு மயங்குதற்குக் காரணமான; உண்மரும் தின்மரும் - உண்பாரும் தின்பாருமாய் வரும் பலரையும்; வரைவு கோள் அறியாது - வரைந்துகொள்வ தின்றாமாறு வழங்கியவழியும்; வாடாச் சொன்றி - குறையாதசோறு; பேராயாணர்த்து - நீங்காத புதுமையினை யுடைத்து; நின் வளன் வாழ்க- இதற்குக் காரணமாகிய நின் செல்வம் வாழ்வதாக எ - று. குரை : அசை. இடையற வின்றிச் சமைத்தற்கு வேண்டும் அரிசியைக் குற்றிக் குற்றித் தேய்ந் தொழிந்தமை தோன்றத், “தொடி மழுகிய உலக்கை” எனக் கூறப்பட்டது. குற்றந்தோறும் ஓசை யெழுப்புவதுபற்றித் தொடி, குரைத்தொடி யெனப்பட்ட தென்றுமாம். உலையிடும் அரிசியைத் தீட்டிக் கோடற்பொருட்டு அட்டிற் சாலைக்கண் மரவுரலும் தொடியிட்டவுலக்கையும் உளவாதலின், “உலக்கை வயின்றோறும்” என்றார். இலையோடு கூடிய சேம்புபோல அகன்ற வாயையுடையதாதலால், சோறு சமைக்கும் மடாவினை “அடைச்சேம் பெழுந்த ஆடுறுமடா” வென்றார். சேம்பின்அடி மடாவின் அடிப்பகுதிக்கும் அதன் இலை அகன்ற வாய்க்கும் உவமம். இதுபோலும் வடிவில் இக்காலத்தும் சோறு சமைக்கும் மண் மிடாக்கள் நாட்டுப்புறங்களிற் காணப்படுகின்றன. எழுந்த; உவமப்பொருட்டு. இம் மடாக்களை நேரிற் கண்டறியாதார் தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர். மடா, மிடா வெனவும் வரும் இக்காலத்தவர் முடா வென வழங்குவர். சிவந்த நிறமுடைய ஊனைக் கொத்திச் சோற்றோடு கலந்து சமைப்பவாதலின், மடாவொடு ஊனமும் உடன் காணப்படுகின்றன. “கோழூன் குறைக் கொழுவல்சி” (மதுரை. 141) என்பதனுரையில், “ஊனைக்கூட இட்டு ஆக்குதலின் கொழுவல்சி” யென்றார், ன நச்சினார்க்கினியர் உரைப்பது காண்க. ஊனம், ஊனைக் கொத்துதற்குக் கொள்ளும் அடிமணையாகிய மரக்கட்டை; ஊனைக் கொத்துதலால் அதன் குருதி படிந்து சிவந்து தோன்றுதலால் “எஃகுறச் சிவந்த வூனத்” தென்றார். இவற்றைக் காணுமிடத்து இவற்றால் ஆக்கப்படும் சோறும் ஊனும் என்ற இவற்றின் மிகுதி, காண்பார் கருத்திற்றோன்றி, அவர் தம் அறிவை மயக்குதலின், யாவரும் கண்டு மதி மருளுவ ரென்றார். யாவரும்” என்றார். சமைக்கும் மடையர்க்கும் மதிமருட்சி பயக்கும் பெருமை யுணர்த்தற்கு. இவற்றை முறையே உண்ணவும் தின்னவும் வருவாரை வரையா தேற்று வழங்குதலி்ன், குறைவுண்டாகாவாறு இடையறாது சமையல் நிகழ்ந்தவண்ணமிருத்தலின், “உண்மரும் தின்மரும் வரை கோளறியாது வாடாச் சொன்றி” யென்றார். அறியா தென்புழி வழங்கவும் என ஒருசொற் பெய்து கொள்க. இனி, வரைகோ ளறியாது ஆடுறு மடாவெனவியைத்து, இத்துணையரென வெல்லை யறியப்படாது பன்முறையும் சமைத்துக் கொட்டுதலைப் பொருந்திய மடாவென் றுரைப்பினு மமையும். ஏனைக் கோளினும் நாளினும் வெள்ளி மிக்க வொளியுடையதாதலால், “வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர்வரு” மென்றார். நேர் கிழக்கில் தோன்றுவதின்றிச் சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்குதலின், வறிது |