எனப் பொருந்தாவுரை கூறினர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் நல்லிசைப்புலமை மெல்லியலார் ஆறாம் பத்தினாற் பாடிய பொழுது, அவர்தம் புலமைத்திறத்தை நன்குணர்ந்த அவ்வேந்தன் அவ்வம்மையார்க்கு அணிகலன்களுக்காக ஒன்பது காப் பொன்னும் நூறாயிரங் காணமும் பரிசிலாகத் தந்து அப்புலவர் பெருமாட்டியாரைத் தன்னருகே அவைக்களப் புலவராக அமர்த்திக்கொண்டான் என்னும் செய்தியை ஆறாம்பத்தின் பதிகம் கூறுகின்றது. “பாடிய பெற்ற பரிசில் கலனணிக வென்று ஒன்பது காப்பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்துப் பக்கத்துக்கொண்டான் அக்கோ” எனவரும் பதிகத் தொடரால் இவ்வுண்மை புலனாம். இதனைத் தெளிவாக வுணரும் வாய்ப்பில்லாத அவ் வரலாற்றாசிரியர் இங்குக் காட்டிய ‘பக்கத்துக் கொண்டான்’ என்பதற்குச் சேரமன்னன் காக்கை பாடினியார் என்னும் புலவரைத் தனக்குரிய மனைவியாகத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான் எனப் பொருந்தாத செய்தியினை ஏற்றியுரைக்கின்றார். சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் தூயவுள்ளத் திறனையும் அவர்களை நன்கு மதித்துப் போற்றிய செந்தமிழ் வள்ளல்களின் மனத் தூய்மையினையும் தெளிவாக அறிந்து கொள்ளும் நூற்பயிற்சியின்றி வரம்பற்ற தம் கால இயல்புகளை எண்ணித் தம் மனம் போனவாறு பொருள்காண முயலுதல் நேரிதன்று. இத்தகைய பிழைபாடுகளுக் கெல்லாம் காரணம், சங்க இலக்கியங்களின் பொருள் நலங்களை இக் காலத்தில் சாதாரண நூற்பயிற்சி யுடையாரும் தெளிந்துகொள்ளும் முறையில் அமைந்த விரிவுரை யில்லாத குறையே யாகும். பதிற்றுப்பத்துப் பாடல்கள் யாவும், சேர வேந்தர்கள் அவ்வப்பொழுது நிகழ்த்திய கடற்போர் முதலிய வரலாற்றுச் செய்திகளையும், அவற்றைச் சிறப்பித்துப் பாடக் கருதிய புலவர்கள் தம் உள்ளத்திற் கருதிய எண்ணங்களையும், அவ்வெண்ணங்களைத் தேனினு மினிய செந்தமிழ்ப் பாடல்களால் அரசனுக்குணர்த்துந் திறங்களையும் தம் அகத்துக்கொண்டு விளங்குகின்றன. இப் பாடல்களின் சுவை நலங்களைத் தமிழ் மாணவர் யாவரும் தெளிவாக உணர்ந்து மகிழும் நிலையில் இந்நூலுக்கு விளக்கமும் விரிவுமுடையதாகப் பதியவுரையொன்று எழுதப்பெறல் வேண்டும் என்னும் நினைவு திருவாளர் ஒளவை. சு. துரைசாமி பிள்ளையவர்கள் உள்ளத்திற் கருக்கொண்டு திகழ்வதாயிற்று. எண்ணிய எண்ணியாங்குத் திருத்தமாகச் செய்து முடிக்கவல்ல திரு. பிள்ளையவர்கள் தமிழ்தழீஇய தம் புலமைத்திறத்தால் பதிற்றுப்பத்து என்னும் பழந்தமிழ்ப் பனுவலுக்கு அமிழ்தென |