பக்கம் எண் :

150

வடக்கிறைஞ்சிய     வெள்ளியென்றும்,  அது    மழை   வளந்தரும்
கோள்களிற்றலைமை   பெற்றதாதலின்,   சீர்சால்   வெள்ளியென்றும்,
தலைமை  பெற்றதாயினும்  ஏனைக்  கோள்களும்  கூடியிருந்தாலன்றி
மழை  வளம்  சிறவாமை தோன்ற, “பயங்கெழு பொழுதொடு ஆநியம்
நிற்ப”  என்றும்  சிறப்புற  மொழிந்தார். நாளாவது நாண்மீன் கூட்டம்
பொழுது:  ஆகுபெயர்.  ஆநியம்  மழை  பெய்தற்குரிய  நல்ல நாள்.
“பயங்கெழு வெள்ளி ஆநிய நிற்ப” (பதிற். 69) எனப் பிறரும் கூறுவர்.
இனிப்  பழையவுரைகாரர்,  “வறிது  வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு   பொழுதொ   டாநிய   நிற்ப   வென்றது,  சிறிது வடக்
கிறைஞ்சின  புகழானமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும்  மற்றைக்
கோட்களுடனே  தான்  நிற்கும் நாளிலே நிற்க வென்றவாறு” என்றும்,
“பொழுதென்றது  அதற்கு  அடியாகிய  கோளை”  யென்றும், “வறிது
வடக்  கிறைஞ்சிய  வென்னும்  அடைச்  சிறப்பான்  இதற்குச்   (இப்
பாட்டிற்குச்) சீர்சால் வெள்ளியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர்.
  

மழை    பொழியும் முகிற்கூட்டம் பக்க வானத்தே கால்  வீழ்த்துப்
பெய்தல்  இயல்பாதலால்,  “கையுற  வணங்கி”  என்றார். கை, பக்கம்,
மன்,  மிகுதிகுறித்து  நின்றது. ஞாயிறுபோல முகிற் கூட்டமும் வலமாக
எழுதல்   பற்றி,   “வலனேர்   பிரங்கும்”  என்றார்.  கீழ்க் காற்றாற்
கொணரப்படும்   மழைமுகில்  பெய்யாது  பொய்த்தல்  அரிதெனற்கு,
“காரெதிர்  பருவம்  மறப்பினும்”  என்றார். ஒருகால் அது மறப்பினும்
இச்   சேரமான்   வழங்கும்   சோறு   குன்றா  தென்பது  இதனால்
வற்புறுத்தவாறு.
  

இதுகாறும்   கூறியது, பீடு கொள் மாலைப் பெரும் படைத்தலைவ,
திருந்திழை  கணவ,  இயலறைக்  குருசில்,  நீர் முதலிய ஐந்தினையும்
அளந்து  முடிவறியினும்  பெருமை  யளத்தற்  கரியை; நின் வளன் -
வீங்கு   பெருக்கம்   இனிது   கண்டேம்;  மழை  காரெதிர்  பருவம்
மறப்பினும்  நின்  வாடாச்  சொன்றி  பேரா  யாணர்த்து; நின் வளன்
வாழ்க   என்பதாம்.   பழையவுரைகாரர்,   “பெரும்படைத்  தலைவ,
திருந்திழை கணவ, குருசில், நீர் நில முதலைந்தினையும் அளந்து முடி
வறியினும் பெருமை யளந்தறிதற் கரியை; நின் செல்வ மிக்க பெருமை
இனிது   கண்டேம்;  அஃது  எவ்வாறு  இருந்த  தென்னின் வாடாச்
சொன்றி  மழை  காரெதிர்  பருவம்  மறப்பினும்  பேரா  யாணர்த்து;
அப்பெற்றிப்  பட்ட  நின்  வளம் வாழ்க வென வினைமுடிவு செய்க”
என்பர்.
  

நேர்     கிழக்கே நில்லாது சிறிது வடக்கண் ஒதுங்கித் தோன்றிய
சீர்சால் வெள்ளியை “வறிது வடக் கிறைஞ்சிய” என அடை கொடுத்து,
சீர்  மாசு  பட்டார்  வடக்கிருப்பாராக,  வடக்கொதுங்கிய வெள்ளியை
வடக்   கிறைஞ்சிய   வென்றதன்   மாசின்மை  தோன்றச்  “சீர்சால்
வெள்ளி”   யென்றும்,   வறிது   வடக்கிறைஞ்சிய  வென்றும் கூறிய
சிறப்பால்,   இப்பாட்டு  இவ்வாறு  பெயர்  பெறுவதாயிற்  றென்றறிக.
சீர்மாசு    பட்டதனால்   கோப்பெருஞ்   சோழனும்   சேரலாதனும்
வடக்கிருந்தமை யறிக.
  

இதனாற்  சொல்லியது  அவன்  பெருமையும் கொடைச்  சிறப்பும்
கூறி வாழ்த்தியவா றாயிற்று.