வென மெலிந்தது; பழையவுரை, “கடாச் சென்னி யென்னு மொற்று மெலிந்த” தென்று கூறுகிறது. நாடு வயல் நாஞ்சி லாடா, புலம் பரப்பறியா என்பன கண்ணன் கை முறிந்தான், கண்ணொந்தான் என்றாற்போலச் சினைவினை முதன்மேனின்றன. “படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி” யென்றதனால், படைவீரர் ஊரிடத்து மன்றங்களிற் சென்று தங்கி, ஆண்டுத் தம்மை யெதிர்த்த பகை வீரரை வென்று அம் மன்றங்களையும் கழுதை யேர் பூட்டி யுழுது பாழ் செய்து விட்டன ரென்பது பெற்றாம். இது பண்டையோர் மரபாதல், “வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்” (புறம்: 15) என்று பிற சான்றோர் கூறுதலாலும் அறியப்படும். பகைவருடைய பெரிய காவலமைந்த நகரிகள் பகைவர்க் கஞ்சி வாழ்வோர் வேறு புலம் நோக்கிச் சென் றொழிந்தமையின், காவலும் கவினுமிழந்து கெட்ட வென்றற்கு, “நீ உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” வென்றார். வையா: செயப்பாட்டு வினைப்பொருட்டு. தோட்டி, கதவு; “நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி” (மதுரை. 693) என்றாற் போல மதிலாகிய யானைக்குக் கதவு தோட்டி போறலின், தோட்டி யென்ப. மதிலைக் காத்தற்கு வலிய காவலாதலால், தோட்டி காவற்பொருளுந் தருவதாயிற்று; “ஆரெயில் தோட்டி வௌவினை” (பதிற். 71) என இந் நூலுள்ளும் வருதல் காண்க. தம்மைப் புரப்போர் போரில் அழிந்தமையின், நகர்க்கண் வாழ்வோர் அங்கே யிராது வேற்றிடம் போய்விடுவர்; “வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட” (பதிற். 49) எனப் பிறரும் உரைப்பர். இவ் வண்ணம் நின் பகைவர் நாட்டின் பெரும்பகுதி யழிவுற்றதாக, ஏனைக் காடும், காடு சார்ந்த நிலமும் மழையின்மையாலும் பெருங் காற்றெழுந்து மோதுவதாலும் தீப்பிறந்து சுடர்விட்டெரிய நிலமுற்றும் வெந்து கரிந்து கிடக்கின்ற தென்பார்,“கடுங்கா லொற்றலின் சுடர்சிறந் துருத்துப், பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்” என்றார். பிசிர், தீப்பொறி, ஆடுதல், பரந்தடுதல். இவ்விடங்களில் ஏனைப் புள்ளும் மாவும் வழங்குதல் அருகினமையின், காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன வென்றற்கு, “ஆண்டலை வழங்கும்” என்றார். கடுங் காற்றால் தீ சிறந்து காட்டைச் சுட்டழித்தமையின், கரிந்து கெட்ட கூடிய நெறிகளிடத்தே கள்வர் தங்கி அரசு காவலி்ன்மையால் ஆறு செல்வோரை யழிக்கும் பெரும் பாழாயினவென்பார், “முனையகன் பெரும் பாழாக மன்னிய” என்றார்; “அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக், கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக், கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்” (பெரும். 39-41) என்பதனால் அரசு காவலுள்வழி, முனையகன் பெரம் பாழாதல் இன்மை யறிக. இவ்வாறு காட்டுத் தீயால் வெந்து கிடக்கும் நிலத்திற் செல்லும் வழியைக் கானுணங்கு கடுநெறி யென்றும் நிற்க நிழலும் தண்ணென்ற மண்ணுமின்றிச் செல்வோர்க்கு அச்சமும் துன்பமுமே பயக்குமாறு தோன்ற நெறியைக் கானுணங்கு கடுநெறியென மிகுத்துரைத்தலின், இப் பாட்டும் இத் தொடராற் பெயர்பெறுவதாயிற்று. இனிப், பழையவுரைகாரர், “கானுணங்கு கடுநெறியென்றது, மழை யின்மையாற் கானம் தீய்ந்த கடிய வழி யென்றவா” றென்றும், “இச் சிறப்பானே இதற்குக் கானுணங்கு கடுநெறி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். |