மிகுவித்தல் இயல்பாதலின், “வெய்துற்று” என்றும் கூறினார். செய்தெனெச்சங்கள் காரணப்பொருள். இந்நிலையில் செய்வோர் செய்வினைப் பயன் பெறுதல் இ்ல்லை யாதலால், “வலமின்” றென்றும், அவர்தம் வருத்தமிகுதி தோன்ற, “அம்ம” வென்றும் குறித்தார். நாடழிந்து விளை பொருளின்றிக் கெட்டு வெம்மை மிக்கதற்குச் சேரனையாதல், அவன் வயவரையாதல், தம் நாட்டு வேந்தரை யாதல் பிறரையாதல் நோவாது காலத்தை நொந்து, “காலையது பண்பெனக் கண்பனி மலிர் நிறை தாங்கிக் கைபுடையூஉ” வருந்தினர் என்றார். ஊழையும் உப் பக்கம் காணும் உரனுடைய ரல்லரென்றற்கு, “மெலிவுடை நெஞ்சினர்” என்றும் அதனால் அவரெய்துவது சிறுமையே யென்பது விளங்க, “சிறுமை கூர என்றும் கூறினார். எனவே, சேரனது சீற்றத்தையும் அவனுடைய வீரரது ஊற்றத்தையும் முன்னே தெரிந்து புகலடையாத சிறுமையும் அதற் கின்றியமையாத உரனின்மையும் ஓராற்றால் உணர்த்தினா ராயிற்று. நெஞ்சில் திண்மையிலதாகவே, எய்துவது சிறுமையாயிற்று. இனி, காலையது பண்பென்புழிக் காலை ஞாயி றென்றும் அதன் பண்பு வெம்மை யென்றும் கொண்டு, காலையது பண்பு வெய்துற்றென இயைத்து ஞாயிற்றின் வெம்மையால் வெயின் மிகுந்து என்பாரு முளர். கட்பனி யெனற்பாலது கண்பணி யென நின்றது. கைபுடையூஉ வென்றது கையாறு. நாடு முற்றும் வயவர் பொருதழித்துக் கொண்டமையின், நாடுகள் மனை பாழ்பட்டுப் -பீர் படர்ந்த வேலியும் நெருஞ்சி செறிந்த கடுவழிகளும் உடையவாயின என்பார்; “பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக” என்றார்; “முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து மனைபாழ் பட்ட மரைசேர் மன்றம்” (அகம் 373) எனப் பிறரும் கூறுதல் காண்க. பாழ் மனைகளில் பீரும் நெருஞ்சியும் அறுகும் பிறவும் மிடைந்திருக்கு மென்பது இன்றும் காணக்கூடியது. மக்கள் வழங்குதலின்மையின், நெருஞ்சியும் பிறவும் காடுபோற் செறிதலால் வழிகள் சிறுகிக்கப்பணம் பரந்த கலலதர் போலச் செல்வார்க்கு வருத்தம் பயத்தலின், “நெருஞ்சிக் காடுறு கடுநெறி யாக” என்றும், அதனைத் தாம் வரும்போது கண்டு போந்தமை தோன்ற “மன்னிய” வென்றும் கூறினார். “மன்னிய” வென்றதனால் மீளவும் நாடாதல் அருமை தோன்றிற்று. முருகன் சூரனைச் சினந்து சென்று அவனிருந்த மூதூரைச் செறுத்த காலத்தே அவன் இனத்தவரது உயிர் குடித்த கூற்றுவனைப் போல நீ சினந்து சென்று போருடற்றிய காலத்தே பகைவரை நின்வயவர் கொன்று குவித்தனரென்பார், “முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் (போல) உரும்பில் கூற்றத் தன்னநின் வயவர் சீறிய நாடே” யென்றார். முருகு, முருகன்; “முருகுபுணர்ந்தியன்ற வள்ளி போல” (நற். 82) என்றார் போல. மூதூர் போல நாடுகள் மன்னிய என முடிக்க “மூதூர் போல வென உவமவுருபு விரித்து அதனை வயவர் சீறிய என்னும் வினையொடு முடிக்க; இனி, போதும் என விரித்து வயவர் சீறிய நாடெனலும் ஒன்று; இனி மூதூர்க் கூற்ற மெனக் கூட்டிக் கூற்றுவன் கொடுமை மிகுதி கூறலு மொன்” றென்பர் பழைய வுரைகாரர். முருகன் சூரனைச் சினந் துடற்றிய போரால் அச் சூரனது மூதூர் கலியழிந்து மாறிய செய்தி உலகறிந்த தாதலின், “கலியழி மூதூர்” என்று எடுத்தோதி, அச் சூரனாலும் பிற ரெவராலும் நலிவு படாத |