விளங்கும் அழகிய இவ்விரிவுரையினை இயற்றி யுதவியுள்ளார்கள். இவ்வுரை இக் காலத்திற் சங்க இலக்கியங்களைப் பயில விரும்பும் யாவர்க்கும் வழிகாட்டியாய் விளங்கும் நற்றிறம் வாய்ந்ததாகும். இவ்வுரையின் இயல்பினை ஒரு சிறிது உற்று நோக்குவோமானால் திரு. பிள்ளையவர்கள் இத் துறையில் மேற்கொண்ட பேருழைப்பும், அவ்வுழைப்பின் பயனாக அவர்களால் விளக்கப்பெற்ற அரிய கருத்துக்களும் நன்கு புலனாம். இவ்வுரை பதிற்றுப்பத்துப் பாடல்களின் பொருள்நயங்களை விரிவாக விளக்குவதுடன் அப் பாடல்களுக்குப் பழைய வுரையாசிரியர் எழுதியுள்ள நுட்பங்களையும் இனிது விளக்கிச் செல்லுகின்றது. அம்முறையினால் இது பழையவுரையின் விளக்கமாகவும் விளங்குகின்றது. எனினும் பழையவுரையாசிரியர் கருத்துக்களை அப்படியே பின்பற்றிச் செல்லாமல் பதிற்றுப்பத்துப் பாடல்களைத் தனி முறையிற் சிந்தித்துணர்ந்து வரலாற்றுமுறைக் கேற்ப இவ்வுரையாசிரியர் தரும் புதிய விளக்கங்கள் பெரிதும் பாராட்டத்தகுவனவாம். இரண்டாம்பத்தின் முதற்பாடலில் உள்ள “கவிர்ததை சிலம்பிற்றுஞ்சுங் கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும், ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” என்னும் தொடர்க்குப் பழைய உரையாசிரியர் கூறிய நயம் அப்பாடலைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் கருத்துக்கு ஒத்ததுதானா என ஐயுறவேண்டியுளது. “முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள் பகற்பொழுதில் தாம் மேய்ந்த நரந்தம்புற்களையும் அவை வளர்தற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிற்கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும் ஆரியர் நிறைந்து வாழும் இமயம் என்றது. இமயமலையின் இயற்கை வளங்களை விளக்குவதல்லது அவ்வளங்களைத் துய்த்து இனி துறையும் கவரிமான்களுக்கும் அங்கு வாழும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பிப்பதன்றாம். இவ்வுண்மையினை நன்குணர்ந்த திரு. பிள்ளையவர்கள் இத் தொடரை இமயமலையின் தன்மை நவிற்சியாகக்கொண்டு உரை கூறிய திறம் (பக்கம் 10-11) நோக்கத்தகுவதாம். இத்தொகையிலுள்ள பாடல்களை இயற்றிய சங்கப் புலவர்களுக்கும் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய பழையவுரையாசிரியர்க்கும் இடையே பிற நாட்டார் நுழைவினாலும் அவர்தம் மொழி வழக்கு முதலிய வேற்றுமைகளாலும் தமிழகம் அடைந்த அரசியல் சமுதாய நினைவு மாற்றங்கள் பலவாகும். இவ்வாறு காலவேறுபாடுகளால் தோன்றும் மாற்றங்களுக்குக் கட்டுப்படாதவர் யாருமிருக்கமுடியாது. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் என்பவற்றுக்கு |