பண்ணொடு பொருந்த வெழுப்பி; மன்றம் நண்ணி - ஊர்மன்றத்தையடைந்து; மறுகுசிறை பாடும் - மறுகுகளின் சிறைக்கண்ணே நின்று பாடிச் செல்லும்; அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடத்தையுடைய ஊர்கள் பொருந்திய நாடுகளாயிருந்தன; அளியமன் - இப்பொழுது அவை அழிந்து கண்டார் இரங்கத்தக்க நிலையை யடைந்தன, காண் எ - று. நெற்கதிரைப் பிசைந்தெடுத்த பசிய நெல்லைக் குற்றி அவலெடுப்பது விளையாடும் பருவத்து இளமகளிர்க்கு இன்றும் இயல்பாயிருத்தலின், அவலெறிந்த வுலக்கையை விதந்தோனினார். நெல் வயலருகே வாழைகள் நிற்றலின், அவற்றைச் சார்ந்தவிடத்தில் விளையாடும் மகளிர் அவலெறிந்த வுலக்கையை வாழைமரத்திற் சார்த்திவிட்டு வயற்குட் புகுந்து ஆங்கு மலர்ந்திருக்கும் வள்ளைப்பூவைப் பறிக்கும் செயலை, “ “அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி, வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்” என்றார். “வளைக்கை மகளிர்” எனவே, விளையாடும் பருவத்து இளமகளிர் என்பது பெறப்படும். நென்மணியின் கனத்தைத் தாங்கமாட்டாது தாள் சாய்ந்து வளைந்து கிடக்கும் நெல்லை, “முடந்தை நெல்” என்றார்; மடம் உடையாளை மடந்தை யெனல்போல “முடந்தை நெல்லின் கழையமல் கழனி” (பதிற். 32) என்று பிறரும் கூறுதல் காண்க. நெல் விளையும் வயலில் நீர் இடையறாது நிற்றலின் பல்வகை மீன்களும் வாழ்தல்பற்றி, அவற்றைக் கவர்ந் துண்பது குறித்து நாரை முதலிய குருகுகள் வயல் முழுவதும் பரந்து நின்று மேயுமாறு தோன்ற, “விளைவயற் பரந்த தடந்தாள் நாரை” யென்றார். மகளிர் வள்ளை கொய்தற்காக வயற்குட் புக்கதும், நாரையினம் அஞ்சி நீங்குதலின், “நாரை யிரிய” என்றும், வாய்த்தலையினும் வரம்புகளினும் நின்று அயிரை முதலிய மீன்களை யுண்ணும் கொக்கும் புதாவும் உள்ளலும் பிறவும் அருகே நிற்கும் மருதினும் மாவினும் காஞ்சியினும் குழீஇயிருத்தலின், “அயிரைக் கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்” என்றார். குழுவலின் எனற்பாலது “குழாஅலின்” என வந்தது. ஏனைய அன்னங்களும் நீர்க்கோழிகளு மாகியவற்றை வளையணியும் பருவத்தரல்லாத மிக்க இளைய மகளிர் துரத்தி யோப்புவ ரென்பார், “வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும்” என்றார். கொய்யு மென்னும் பெயரெச்சம் வயலென்னும் பெயர்கொண்டது. வெண்குரு கோப்பும் நாடு, மறுகு சிறை பாடும் நாடு என இயையும். வெண்கை, வளையணியாத கை; வெறிதாய இடத்தை வெளில் என்பது போல, வளை யணியாத வெறுங்கை வெண் கை யெனப்பட்டது, வெறிதாய இள மகளிரின் மென் கையை “வெண்கை” யென்றும், அதனையுடைய சிறு மகளிரை “வெண்கை மகளிர்” என்றும் சிறப்பித்ததனால், இப்பாட்டு வெண்கை மகளிர் எனப் பெயர் பெறுவதாயிற்று. பழையவுரைகாரர், வெண்கை யென்றதற்கு, “வெண் சங்கணிந்த கை யென்பாரு முளர்; இனி, அடுகை முதலாகிய தொழில் செய்யாத கை யென்பாரு முளர்” என்றும், “முடந்தை நெல் லென்றது கதிர்க் கனத்தாலே வளைந்து முடமான நெல் லென்றவாறு; முடந்தை யென்பது பெயர்த்திரிசொல்; இனிப் பழ வழக்கென்பது மொன்று” என்றும் கூறுவர். நாடோறும் மண விழாவும் பிற விழாவும் இடையறவின்றி நிகழ்தலால் “அழியா விழ” வென்றார். திவவையுடைய யாழ் திவவு எனப்பட்டது; ஆகுபெயர். பழையவுரைகாரரும் இவ்வாறே கூறுவர். |