யாழிற்கு இழிவு செயற்பாட்டிலும் இசை நயத்திலும் குற்றமுடைமையாதலின், குற்றமில்லாத யாழை, “இழியாத் திவவு” என்றார். விழாக் காலத்து வழங்கப்படும் சோற்றை நச்சி வயிரியர் கூட்டம் நிறைந்திருக்குமாறு தோன்ற, விழாவினை விதந்து வயிரிய மாக்களின் உண்மையை யெடுத்தோதினார். “பேரூர்ச் சாறுகழி வழிநாள் சோறுநசை யுறாது” வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந. 1-3) என முடத்தாமக் கண்ணியார் மொழிவதனால் இவ்வுண்மை துணியப்படும். இவர்கள், மன்றம் புகுந்து யாழைப் பண்ணமைத்து இசையை யெழுப்பி, மறுகுகளின் சிறையிடத்தே நின்று பாடுதலின், “பண்ணமைத்தெழீஇ, மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும்” என்றார். நல்ல பரப்பும் செறிந்த வூர்களுமுடைய நாடாதல் தோன்ற, “அகன்கண் வைப்பின் நாடு” என்றார். வைப்பு, ஊர், அச்சிறப்பழிந்து, காண்போ ருள்ளத்தே இரக்கம் தோன்றத்தக்க பாழ்நிலை யெய்திற்றென்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை. பல்வேறு கூலங்களைக் கொண்டு முரசிற்குக் குருதிப் பலியூட்டி, வழிபட்டுப் போர்முழக்கம் செய்வது மரபாதலால், விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மாக்கண்” என்றார். கண்ணையுடைய முரசு “கண்” ணெனப்பட்டது. கொல்லேற் றுரிவையின் மயிர் சீவாது அகத்தே அம் மயிர் மறையும்படியாகப் போர்த்த முரசு என்றற்கு, “மயிர் புதை மாக்கண்” என்றார். முரசின் முழக்கம், கேட்கும் பகைவர் உள்ளத்தே அச்சம் பயந்து, பணிந்து திறை பகராதவழிக் கொன்று குவிப்பேனெனும் வேந்தனது குறிப்பை வெளிப்படுத்தலின், “கடிய கழற” என்றார். இவ்வாறு கழறவும் கேளாது போர் நேரும் பகைவர் செய்யும் போரினைப் பொருள் செய்யாது எளிதில் மலைந்து அவர்தம் காதல் மிக்க அரணைக் கைப்பற்றலின், “அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும்” என்றும், அவ்வாறு கைப்பற்றும் குட்டுவனது தானைப் பெருமையை, “பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பில் தானை” யென்றும் கூறினார். எனவே, பகைவர் தானை வரம்புடைய தென்றும், அதுவே அப்பகைவரழிவுக்கு ஏதுவாயிற் றென்றும் உணர்த்தியவாறாம். பரந்து சென்று பகைவரை வென்று அவர்தம் வளம் சிறந்த நாட்டை யழித்த தென்பார், “பரவா வூங்” கென்றும், பரவியபின், அந்நாடு அழிவுற்றுக் கிடக்கும் நிலையைக் கூற நினைக்கின், உள்ளத்தே அந் நாட்ட தழிவு அளியைப் பிறப்பித்துச் சொல்லெழாவாறு செய்தலின், “அளியமன்” என்றும் கூறினார். இதுகாறும் கூறியது வளைக்கை மகளிர் அவலெறிந்த உலக்கையை வாழையிற் சேர்த்தி, வள்ளைப் பூவைக் கொய்யும் நெல்வயற்கண், பரந்து மேயும் நாரை யிரிய, கொழுமீ னார்கைய மரந்தொறும் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்புவதும், வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்றம் நண்ணி மறுகு சிறை பாடுவதுமாகிய அகன்கண் வைப்பின் நாடுகளாய் இருந்தன, மாக்கண் கடிய கழற, ஆரெயில் கடக்கும் குட்டுவன் தானை பரவா வூங்கு; இப்போது அளிய மன் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “குட்டுவன் வரம்பில் தானை பரந்த இப்பொழுது அழிந்து கிடக்கின்ற இந் நாடுகள், குட்டுவன் வரம்பில் தானை பரவா வூங்கு முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த நாரை யிரிய, வெண்கை மகளிர் வெண்குரு கோப்புதலை யுடையவாய், அழியாத விழவினையும், இழியாத |