14 - 21. காலமன்றியும்.............பழனப்பாலும். உரை : தேம்பாய் மருதம் முதல் படக் கொன்று - தேன் பாயும் மருதமரத்தை அடியோடே சாய்த்து; வெண்டலைச் செம் புனல் பரந்து - வெள்ளிய நுரை சுமந்து வரும் சிவந்த புது வெள்ளம் பரந்து வர; மிகுக்கும் வாய் பல சூழ் பதப்பர் - அது மிக்கு வரும் இடங்களில் அணையாக இடப்படும் பல வைக்கோற் புரிகள் சூழக் கட்டிய மணற் கரிசைகள்; பரிய - கரைந்துகெட; வெள்ளத்துச் சிறை கொள் பூசலிற் புகன்ற ஆயம் - அவ் வெள்ளத்தை அணையிட்டுத் தடுப்பார் செய்யும் ஆரவாரத்தில்விருப்புற்ற மக்கட் கூட்டம்; முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும் முழவு முழங்கும் பழைதாகிய வூரிடத்து நிகழும் திருவிழாக் கண்டு மீண்டு செல்லும்; செழும் பல் வைப் பின் - செழுமையான பலவாகிய ஊர்களையும்; காலமன்றியும் - காலமல்லாத காலத்தும்; கரும்பறுத்து ஒழியாது அரிகால் அவித்து - விளைந்து முதிர்ந்த கரும்பினை யறுத்துக் கொள்வதோடொழியாது அதன் அரிகாலையும் அகழ்ந்து சிதைத்து; பலபூ விழவின் - அவ்விடத்தே மலரும் பல்வகைப் பூக்களைக்கொண்டு எடுக்கும் விழாவினையுமுடைய; பழனப் பாலும் - மருதநிலப் பகுதியும் எ - று. பல பூ விழவினையும் செழும் பல்வைப்பினையுமுடைய பழனப் பாலும் என இயையும். பழையவுரைகாரர், “பல பூ விழவினையுடைய வைப்பு எனக் கூட்டுக” வென்பர். நீர் வளம் இடையறாமையின், காலமல்லாத காலத்தும் கரும்பு முற்றி விளைவதும் அறுக்கப்படுவதும் உண்டென்பார், “காலமன்றியும் கரும்பறுத் தொழியாது” என்றார். கரும்பறுத்த அரிகாலும் விளைந்து முற்றுதலினாலும், கரும்பின் பாத்தியில் பல்வகைப் பூக்கள் மலர்தலினாலும், அப் பூக்களின் பன்மை மிகுவது குறித்து, அரி காலை முற்றவும் சிதைத்தன ரென்பார், “அரிகா லவித்து” என்றார். அவித்து என்னும் வினையெச்சத்தைப் பல பூக்கொண்டெடுக்கும் விழவின் எனத் தொக்கு நிற்கும் எடுக்கும் என்னும் வினையொடு முடிக்க. கரும்பின் பாத்தியிற் பல்வகைப் பூக்களும் மலருமென்பதை, “வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின், பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின” (புறம். 386) என்று பிறரும் கூறுதலா லறிக. பல்வகைப் பூக்களைக்கொண்டெடுக்கும் விழா இந்திர விழாவென வறிக; “இந்திர விழாவிற் பூவி னன்ன” (ஐங். 62) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இவ் விழா மென்புலத்தவர்க் குரியது. நிரம்பப் பூத்துத் தேன் சொரிய நின்ற மருதமரம் என்பார். “தேம் பாய் மருத” மென்றும், வந்த வெள்ளம் அதனை அடியோடே சாய்த்துக் கெடுத்த தென்றற்கு “முதல்படக் கொன்று” என்றும் கூறினார். புதுப்புனல் செந்நிறங் கொண்டு நுரைத்து வருமாதலின், அவ்வியல்பு தோன்ற, “வெண்டலைச் செம்புனல்” என்றார். பரந்தென்புழி வர என ஒரு சொல் வருவிக்க பழையவுரைகாரர், “புனல் பரந்தென்றதனைப் பரக்க வெனத் திரிக்க” வென்பர். வாய் மிகுக்கும் என்பதனை மிகுக்கும் வாய் என மாறுக. |