யுணர்த்திநின்றது. காட்டின் பயமாறிய பகுதியும் பயம் பொருந்திய பகுதியும், அக்காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லைப் புறவு முற்றும் அகப்பட “கடற்றவும் பிறவும்” என்றார். “பிறவு மென்றது அவ்வாறொரு நிலமாகச் சொல்லப்படாத பல நிலப் பண்புமுடைய இடங்களு மென்றவா” றென்து பழையவுரைகாரர் கூறுவர். இதுகாறும் கூறிய நிலப்பகுதிகளி லெல்லாம் அங்கு வாழ்வோர் வினையை அவற்றின் மேலேற்றிக் கூறியதற்குப் பழையவுரைகாரர், “முன்பு எண்ணி நின்ற நிலங்களெல்லாம் ஆகுபெயரான் அந்நிலத்து வாழ்வார் மேலனவாகக் கொள்க” என்று கூறுகின்றார். 30 - 39. பணைகெழு............பருந்திருந்துஆர. உரை : பணை கெழு வேந்தரும் வேளிரும் - முரசினையுடைய முடியுடைய வேந்தரும் குறுநில மன்னரும்; ஒன்று மொழிந்து தம்முட் கூடி ஒரு காரியமே செய்வதாகத் துணிந்து; கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க - கடலிடத்தும் காட்டிடத்தவுமாகிய அரண்களைக் கொண்டும் வலியிலராய் நடுக்க மெய்துமாறு; முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிர - மாறுபாடு மிக்க போரினைப் புலப்படுத்தும் முரசினது கடிய முழக்கமானது சென்று விசும்பக மெல்லாம் எதிரொலித்து முழங்க; கடுஞ்சினம் கடாஅய் - மறவர்பால் மிக்க சினத்தை யெழுப்பி; முழங்கும் மந்திரத்து - முழங்குகின்ற மந்திர வொலியால்; அருந்திறல் மரபின் கடவுட் பேணியர் - அரியதிறல் படைத்த முறைமையினையுடைய முரசுறை கடவுளை வழிபடுவானாய்; உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் - வழிபாட்டினைச் செய்வோனாகிய உயர்ந்தோன் படைத்த பெறுதற்கரிய பலியினை; கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க - பெரிய கண்களையுடைய பேய்மகள் தீண்டுதற் கஞ்சிக் கைகளைப் புடைத்துக்கொண்டு நடுங்க; நெய்த்தோர் தூய நிறைமகிழ் இரும்பலி - குருதி தூவிய நிறைந்த கள்ளொடு கூடிய பெரிய அப் பலியானது; எறும்பு மூசா இறும்பூது மரபின் - எறும்பும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினையுடைத்தாகவும்; கருங்கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர - தூவப்பட்ட அப் பலியினைக் கரிய கண்களையுடைய காக்கையுடனே பருந்துகள் இருந்துண்ணுமாறு எ - று. இது வெற்றி வாய்த்தற்பொருட்டு முரசுறை கடவுட்குப் பரவுக் கடன் ஆற்றும் திறம் கூறுகிறது. முரசுடைச் செல்வராதலின், முடி வேந்தரைப் “பணைகெழு வேந்தர்” என்றார்; அவர் பாண்டியரும் சோழருமெனக் கொள்க. வேளி ரென்றது, அவ்விருவர்க்கும் துணையாய் வரும் குறுநில மன்னரை என்க. அவருள் ஒருவர் கருதியதே ஏனை யாவரும் துணிந் தொழுகினரென்றற்கு “ஒன்று மொழிந்” தென்றார். பழையவுரைகாரர், “ஒன்றுமொழிந்தென்றது, ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து சொல்லியென்றவா” றென்பர். பாண்டி வேந்தர்க்கு மூன்று பக்கத்திற் கடல் |