முள” ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். “கடுஞ்சினங் கடாஅய்” என்ற எச்சத்தைப் பழையவுரைகாரர் எறியும் (வரி. 43) முரசு என்பதனோடு முடிப்பர். 40 - 44. ஓடா................முரசே. உரை : கடுஞ் சின வேந்தே - மிக்க சினமுடைய வேந்தே; ஓடாப் பூட்கை - பகைவர்க்குப் பிறக்கிடாத மேற்கோளும்; ஒண்பொறிக் கழற்கால் - ஒள்ளிய பொறிகள் பொறித்த கழலணிந்த அடியுமுடைய; பெருஞ் சமம் ததைந்த - பெரிய போரிடத்தே பகைவர் செய்யும் போரினைச் சிதைத்துக் கெடுத்த; செருப்புகல் மறவர் - போர்த்தொழிலை விரும்பும் வீரர்; நிலன் அதிர்க்கும் உருமுக்குரலொடு - நிலத்தை யதிரப்பண்ணும் இடிபோலும் தம் குரலுடனே; கொளைபுணர்ந்து - இசை விருந்திற் கலந்து; பெருஞ்சோறு உகுத்தற்கு - சோற்றுணவாகிய பெரிய விருந்துண்பித்தற்காக; நின் தழங்கு குரல் முரசு எறியும் - நினது முழங்குகின்ற கொடைமுரசம் எறியப்படுகின்றது எ - று. பெருஞ் சமம் ததைந்த செருவைப் புகலும் மறவ ரெனப் புகழ்கின்றாராகலின், அதற்குரிய அவர்தம் பண்பினை; “ஓடாப் பூட்கையொண்பொறிக் கழற்கால்” என்பதனால் உணர்த்தினார். பொறி, தொழிற்பாடு, தாங்கள் செய்த போர்த்தொழிலின் வெற்றித் திறத்தைக் கழலில் பொறித்தலும் மரபாதலின், அப்பொறிகளை ஈண்டு ஒண்பொறி யென்றாரெனினு மமையும். “ஒண்பொறிக் கழற்கால்” (பதிற். 34) என்பதற்குப் பழையவுரைகாரர் கூறுவதனால், இம் மரபுண்மை அறியப்படும். உருமு நிலன் அதிர்க்கும் குரல் என்பதனை, நில னதிர்க்கும் உருமுக் குரல் என மாறுக. பழையவுரைகாரர், “மறவர் குரலெனக் கூட்டுக” வென்றும், “ஆகுபெயரான் உருமு நிலனதிர்க்கும் குரலோடு ஒத்த மறவர் குரலை உருமு நிலனதிர்க்கும் குரல் என்றானாகக் கொள்க” வென்பர். மறவர் குரலுக்கு உருமுக் குரலை யுவமம் கூறியது, அவரது முரண்மிகு மறத்தைக் குறித்துநின்றது. பெருஞ் சமம் ததைந்த வீரர்க்கு இசை விருந்தும் பெருஞ்சோற்று விருந்தும் செய்தல் வேந்தர்க்கு இயல்பாதலின், அவ்வியல்புபற்றி, எறியப்படும் முரசினை ஈண்டு எடுத்தோதினார். இப் பெருஞ்சோற்று நிலை, “முதியர்ப் பேணிய வுதியஞ்சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” (அகம். 233) என்பதனாலும், “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை” (தொல். பொ. 63) என ஆசிரியர் கூறுதலாலும் உணரப்படும். இக் கருத்தே கொண்ட நச்சினார்க்கினியரும் இப்பாட்டினைப் பெருஞ்சோற்று நிலைத் துறைக்கு உதாரணமாகக் காட்டுகின்றார். இதுகாறும் கூறியது, மென்பாலனவும், புன்புல வைப்பும், பழனப்பாலும், புறவணி வைப்பும், கடற்றவும் பிறவுமாகிய ஐவகை நிலத்து மக்களும், அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து அரண் வலியாராய் நடுங்குமாறு, கடுங்குரல் விசும் படைந்ததிர, பேய்மகள் கைபுடைத்து நடுங்க, கடுங்சினங் கடாஅய் முழங்கும் மந்திரத்தான் |