துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : கமழ்குரற் றுழாஅய். 1 - 10. குன்றுதலை...........பெயர. உரை : குன்றுதலை மணந்து - குன்றுகள் பல தம்மிற் கூடித் தொடர்ந்து; குழூஉக் கடல் உடுத்த - அலைகள் கூடி முழங்குதலையுடைய கடலை ஆடைபோலச் சூழக்கொண்ட; மண்கெழு ஞாலத்து மண் பொருந்திய நிலவுலகத்தில்; மாந்தர் கைசுமந்து ஒராங்கு அலறும் பூசல் - வழிபட வரும் மக்கள் தம் தலைமேற் கைகூப்பி ஒருங்குகூடிச் செய்யும் பேராரவாரம்; நால் வேறு மாதிரத்து நனந்தலை - நான்காக வேறுபட்ட திசையிடத்தே பரந்த இடங்களில்; ஒருங்கு எழுந் தொலிப்ப - ஒன்றாய்த் திரண்டெழுந் தொலிக்க; உயர்வடித் தெள்மணி எறியுநர் - உயர்ந்த மிகத் தெளிந்த ஓசையைக் செய்யும் மணியை யியக்குபவர்; கல்லென - கல்லென வோசை யெழுமாறு இயக்காநிற்ப; உண்ணாப் பைஞ்ஞிலம் - உண்ணாநோன்பு மேற்கொண்ட விரதியர்; பனித்துறை மண்ணி - குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்று படிந்து நீராடி; திருஞெமர் அகலத்து - திருவீற்றிருக்கும் மார்பின்கண் அணியப்பெற்றுள்ள; வண்டூது பொலிதார் கமழ்குரல் துழாஅய் - வண்டு மொய்த்து விளங்கும் மாலையாகிய மணம் கமழும் கொத்துக்களாற் றொடுத்த துளசிமாலையும்; கண் பொரு திகிரி - காண்பவர் கண் கூசுமாறு ஒளி திகழும் ஆழிப்படையு முடைய; செல்வன் சேவடி பரவி - செல்வனான திருமாலின் செவ்விய அடியில் வணங்கி வாழ்த்தி; நெஞ்சு மலி உவகையர் - நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சி யுடையராய்; துஞ்சு பதிப் பெயர - தாந்தாம் இனி துறையும் ஊர்கட்குத் திரும்பச் செல்ல எ - று. மாந்தர் அலறும் பூசல் ஒருங்கெழுந் தொலிப்ப, மணி யெறியுநர் கல்லென இயக்க, பைஞ்ஞிலமாகிய விரதியர், துறை மண்ணி, செல்வன் சேவடி பரவி, உவகையராய்ப் பதிப் பெயர என முடிக்க கல்லென இயக்க என ஒருசொல் வருவிக்க. குழூஉதல், அலைகள் கூடி முழங்குதல். பல பொருள்களும் திரளுதலையுடைய கடல் குழூஉக் கடல் எனப்பட்ட தென்றும் கூறுவர். தலைமணத்தலாவது, தம்மிற் கூடித் தொடர்ந்திருத்தல். |