கடற்பகுதியை நீக்குதற்கு “மண்கெழு ஞாலம்” என்றார். உச்சிக் கூப்பிய கையராய்ப் பலராய் ஒருங்கு கூடிச் செய்து கொள்ளும் வேண்டுகோளின்கண் குறையே பெரிதெடுத்து மொழியப்படுதலின், அதனை, “அலறும் பூசல்” என்றார். குறையை நினைந்து மொழியுமிடத்து மனம் கலங்கி அழுகை தோற்றுவித்தலின், “அலறும் பூச” லாயிற்றென வறிக. நால்வேறு மாதிரத்து நனந்தலை யென்க. மக்கள் நாற்றிசையிலும் பூசலிட்டு வருதலின், நாற்புறத்தும் ஒருங்கெழுந் தொலித்த தென்றார். தெள்ளுயர் வடிமணி யெனக் கிடந்தவாறே கொண்டு தெளிந்த ஓசையும் உயர்ந்த திருந்திய தொழிற்பாடும் உடைய மணியென் றுரைப்பினு மாம். எறியுந ரென்பதை வினையெச்ச முற்றாக்கி, கல்லென்னு மோசை யுண்டாக எறிந்துகொண்டு செல்ல என்றலுமொன்று. “மணி யெறிதலை உண்ணாப் பைஞ்ஞிலத்தின் தொழிலாக்கி அவர்கள் மணியை யெறிந்து தீர்த்த மாடுகின்றார்களாகக் கொள்க. எறியுந ரென்பது வினையெச்ச முற்” றென்றும், “இனி, எறியுந ரென்பதனைத் தொழிற்பெயராக்கி, மணியை யெறிவார் தீர்த்த மாடுதற்கு இது முகுத்த மென்று அறிந்து வருதற்பொருட்டு அம்மணியை யெறிந் தாரவாரிப்ப வென் றுரைப்பாரு முளர்” என்று பழையவுரைகாரர் கூறுவர். உண்ணாப் பைஞ்ஞிலம் என்பதில், ஞிலமென்பது ஆகுபெயராய் மக்கட்டொகுதியை யுணர்த்த, உண்ணாவென்பது அதனை விசேடித்து, உண்ணா நோன்பினையுடைய மக்கட் டொகுதி யென்ப துணர நின்றது. உண்ணாப் பைஞ்ஞில மென்றது “அத் திருமால் கோயிலுள் வரம் வேண்டி யுண்ணாது கிடந்த மக்கட் டொகுதி யென்றவாறு” என்பது பழையவுரை திருமகள் வீற்றிருக்கும் மார்பினைத், “திருஞெம ரகலம்” என்றார். “திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை” (பரி. 1) என்றார் பிறரும். வண்டூது பொழிதா ராகிய துழாய் என்று இயைக்க. தாரையுடைய திரு வென இயைதலு மொன்று. துழாயும் திகிரியுமுடைய செல்வன் என்க. நறுமணங்கமழும் இயல்பிற்றாதல் தோன்ற, “கமழ் குரல் துழாய்” என்றார்; பிறரும், “நக்கலர் துழா அய் நாறிணர்க் கண்ணியை”(பரி. 4) என்பது காண்க. தனித்தனிப் பூக்களாக எடுத்துத் தொடுக்கப்படாது கொத்துக் கொத்தாக வைத்துத் தொடுக்கப்படும் சிறப்பும், மிகச் சிறிதாகிய தன்னகத்தும் தன்னைச் சூழ்ந்திருக்கும் இலைகளி னகத்தும் ஓரொப்ப மணங்கமழும் மாண்புமுடைய துழாயை, கமழ்குரற் றுழாய் எனச் சிறப்பித்த செம்மை கருதி, இப் பாட்டிற்கு இது பெயராயிற்று. இனி, “நாறாத பூவுடையதனை மிக நாறுவ தொன்று போலச் சாதி பற்றிச் சொன்ன சொற் சிறப்பான் இதற்குக் கமழ்குரற் றுழா யென்று பெயராயிற்” றென்பர் பழையவுரைகாரர். அவரே, செல்வ னென்றது “திருவனந்தபுரத்துத் திருமாலை” யென்றும் கூறுவர். இதனால், உண்ணா நோன்பிகளும் பிறரும் திருமாலை வழிபடுந் திறம் கூறப்படுமாறு காண்க. 11 - 17. மணிநிற....................அற்றே. உரை : மணி நிற மையிருள் அகல - நீலமணியின் நிறத்தையுடைய கரிய விருள் நீங்கும்படி; கோடு கூடு மதியம் நிலா விரிபு இயலுற் றாங்கு - பக்கம் நிரம்பிய முழுமதியம் வெண்ணிலவைப் பொழிந்து செல்வது போல; துளங்கு குடி விழுத்திணை திருத்தி - வருத்தமுற்ற |