குடிமக்களின் நல்லொழுக்கம் இனிது நிலவப்பண்ணி; முரசு கொண்டு - பகைவரை வென்று அவர்தம் முரசினைக் கைக்கொண்டு; ஆண் கடன் இறுத்த - ஆண்மைக்குரிய கடமைகளைச் செவ்வையாகச் செய்து முடித்த; நி்ன் பூண் கிளர் வியன் மார்பு நினது பூணார மணிந்த அகன்ற மார்பு; கருவி வானம் தண் தளிதலைஇய - தொகுதி கொண்ட மேகம் குளிர்ந்த மழையைப் பெய்தவற்றை; வடதெற்கு விலங்கி - வடக்கிலிருந்து தெற்காகக் குறுக்கிட்டு நின்று; விலகு தலைத்து எழிலிய - தடுத்த உச்சியினை யுடைத்தாய் எழுந்துள்ள; பனிவார் விண்டு விறல்வரையற்றே - குளிர்ந்த பெரிய மலையையொப்பதாகும் எ - று. மதியம் இருளகல நிலா விரித்து இயலுற் றாங்கு, குடி திணை திருத்தி ஆண் கடன் இறுத்த நின் மார்பு வரையற்று என முடிக்க. பிறைமதியின் இருகோடும் கூடியவழி முழு மதிய மாதலின், “கோடு கூடு மதியம்” என்றார். எனவே, கோடு கூடாதது பிறையாதல் பற்றி, “கோடு வாய் கூடாப் பிறை” எனச் சான்றோராற் கூறப்படுதல் காண்க. இருளகற்றி நிலவைச் சொரிந்து செல்லும் மதியம் போல, இச் சேரமானும் குடிமக்களுக்கு உண்டாகியிருந்த துளக்கம் நீக்கி, அருளைச் செய்து, திருமாலை வழிபடுதல் முதலிய நல்லொழுக்கத்திலே செல்வித்த சிறப்புக் குறித்து, “துளங்கு குடி விழுத்திணை திருத்தி” என்றும், துளக்கத்துக் கேதுவாகிய பகைத்துன்பத்தை நீக்கியவாற்றை, “முரசுகொண்டு” என்றும், மக்களைத் தமக்குரிய நல்லொழுக்கத்திலே நிறுத்துதல் ஆண்கட னாதலின், அவ்வாறு நிற்பித்த சிறப்பை, “ஆண் கடன் இறுத்த” என்றும் கூறினார்; “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (புறம். 312) என்று பிறரும் கூறுதல் காண்க. மக்கட்கு உண்டாகிய துளக்கங் கெடுத்து விழுமிய ஒழுக்கத்தை மேற்கொள்வித்த இவனது மாண்பைப் பிறாண்டும், “ஆன்றவிந் தடங்கிய செயிர்தீர் செம்மால், வான்றோய் நல்லிசை யுலகமோ டுயிர்ப்பத், துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்” (பதிற். 37) என்று பாராட்டுவர். இனி, இதனை, விழுத்திணை துளங்குகுடி திருத்தி என இயைத்து உயர்ந்த குடியிற் பிறந்தோருடைய வறுமையால் தளர்ச்சியுற்ற குடும்பங்களை அவற்றிற்கு வேண்டுவன வுதவி நன்னிலைக்கண் நிறுத்தி யென்று உரைத்தலுமுண்டு; ஈண்டு அதனாற் பொருள் சிறவாமை காண்க. தலைஇய என்பதனைப் பெயராக்கி, இரண்டாவது விரித்து முடிக்க. வட தெற்காக விலங்கி நிற்பது சேரநாட்டு மலைத் தொடர். கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் செல்லும் மேகக் கூட்டத்தைக் குறுக்கே நின்று தடுக்கும் சிகரத்தை யுடைத்தாய் உயர்ந்து நிற்பது பற்றி, மேலை மலைத்தொடரை, “வட தெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய, பனிவார் விண்டு” என்றார். வில கென்னும் முதனிலை, பெயரச்சப் பொருட்டு. எழிலிய, உயர்ச்சிப் பொருட்டாய பெயரெச்சக் குறிப்பு. “பனிவார் விண்டு” என்றது கொண்டு, இதற்கு இமயமலை யென்று பொருள் கூறுவாருமுளர். மேலைமலைத் தொடரும் அவ் வியல்பிற்றாதல் கோடைக்கானல், உதகமண்டலம் முதலியவற்றால் அறியப்படும். இனி, பழையவுரைகாரர், “பதிப்பெயர (10) வென்னும் எச்சத்தினை மதியம் இயலுற்றாங்கு என்னும் வினையொடு முடிக்க” என்றும், “உண்ணாப் பைஞ்ஞிலம் நெஞ்சுமலி யுவகையராய்த் தாம் துஞ்சு பதிகளிலே பெயரும்படி மையிரு |