ளகலக் கோடு கூடுமதியம் இயலுற் றாங்குத் துளங்குகுடி விழுத்திணை திருத்தி எனக் கூட்டி முடிக்க” என்றும், “துஞ்சு பதிப் பெயர வென்னும் பெயரெச்சத்தினை ஆண் கடன் இறுத்த வென்னும் வினையொடு முடித்து, வழி, ஆறலை கள்வர் முதலாய ஏதங்களின்றித் தாந் தாம் துஞ்சுபதிகளிலே பெயரும்படி தன் னாண்மைக்கடனை இறுத்த வென் றுரைப்பாரு முள” ரென்றும் கூறுவர். இனி, முரசு கொண்டு வேறே உரை கூறலுற்ற பழையவுரைகாரர், “முரசுகொண் டென்றது, சிலகாலத்துப் பயன்கொள்வா ரின்மையி்ன், பண்ணழிந்து கிடந்த பழைய முரசினைத் தான் தோன்றி அதன் அழிவு தீர்த்து அதன் பயன்கொண்டு” என்றும், ஆண்கட னிறுத்தலாவது “ஆண் மக்களாயுள்ளார் தம் கீழ்வாழ்வாரைக் காத்தற்பொருட் டவர்க்கு அவர் செய்யும் கடன்களெல்லாம் செய்து முடித்த” லென்றும் கூறுவர். விலங்கியென்பதனை விலங்க வெனத் திரித்து, பனிவார் விண்டுவாகிய விறல் வரையென இருபெயரொட் டென்று பழையவுரை கூறும். 18 - 23. கடவுள்................நீயே. உரை :பரே ரெறுழ் முழவுத் தோள் - பருத்த அழகிய வலிமிக்க நின்னுடைய முழவுபோலும் தோள்கள்; கடவுள் அஞ்சி - தேவர்கட்கு அஞ்சி; வானத்து இழைத்த தூங்கு எயில் கதவம் - வானத்தில் அவுணர்களால் அமைக்கப்பட்டிருந்த தொங்குகின்ற மதிலினது கதவுக்கு; காவல் கொண்ட எழூஉ நிவந் தன்ன - காப்பாக இடப்பட்ட கணைய மரத்தைத் தூக்கி நிறுத்தினாற் போல வுள்ளன; வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து - வெள்ளிய அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்; வண் புகழ் நிறுத்த - வளவிய புகழை நிலை நாட்டின; வகை சால் செல்வத்து - பலவேறு வகையினைக் கொண்ட செல்வங்களையுடையனாதலால்; வண்டன் - வண்டன் என்னும் வள்ளலை; நீ அனையை மன் - நீ பெரிதும் ஒத்திருக்கின்றாய் எ - று. அவுணர் தமக்குப் பகைவராகிய தேவர்கட்கு அஞ்சி வானத்திலே தாம் செல்லுமிடந்தோறும் உடன்வருமாறு அமைத்திருந்த மதிலைச் சோழனொருவன் தேவர்பொருட்டு வென் றிழித்தா னென்பது கதை. இதனை, “திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த, விறல்மிகு முரசின் வெல்போர்ச்சோழன்” (தொல். கள. 11. நச்.) என்றும், “வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில், தூங்கு மெயிலும் தொலைத்ததால்” (பழ. 49) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கடவுள் என்புழி நான்கனுருபு விகாரத்தாற்றொக்கது. முழவு போலும் தோள், முழவுத்தோ ளெனப்பட்டது. தோள்கள் நிவந்தன்ன என முடிக்க. எழூஉ, கதவுக்குக் காப்பாகக் குறுக்கே இடப்படும் கணையமரம். குறுக்கே கிடக்கும் எழூஉ தோட்கு உவம மாகாமையின், “எழூஉ நிவந்தன்ன” என்றார். பழையவுரைகாரரும், “நின் தோள்கள் எழூஉ நிவந்தன்ன” என்றே கூறுவர். வண்புகழ்க்கு நிலவுலகம் ஆதாரமாதலின், “உலகத்து வண்புகழ் நிறுத்த” என்றும், உலகம் கடலாற் சூழப்பட்டு |