நிலைத்திருப்பது அதன்கண் வாழ்வார் இசை நடுதற்பொருட்டே யென்பது தோன்ற, “வெண்டிரை முந்நீர் வளைஇய உலகத்து” என்றும் சிறப்பித்தார். புகழ் ஈவார்மேல் நிற்ப தாகலானும், அதன் வண்மை ஈயப்படும் செல்வத்தின் பன்மை மேல தாகலானும், செல்வத்துப் பயனே ஈத (புறம். 189) லாகலானும், “வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து” என்று கூறினார். எனவே, வண்புகழும் செல்வமும் வண்டன் என்பான் பால் சிறப்புற இருந்தமை பெறப்படும். மன், மிகுதி குறித்து நின்றது. இனி, நிவந் தன்ன என்பதை முற்றாக்காது நிவந் தன்ன முழவுத் தோளால் வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்தையுடைய வண்டன் என்பானை ஒப்பாய் என்றுரைப்பின், சேரனுடைய பலவகை மாட்சிகளையும் தெரித்துக் கூறும் ஆசிரியர் கருத்து விளக்கமுறாமை காண்க. 24 - 8. வண்டுபட............செல்வி. உரை : வண்டுபட ஒலித்த கூந்தல் - வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும்; அறம் சால் கற்பின் - அறம் நிறைந்த கற்பையும்; குழைக்கு விளக்காகிய ஒள் நுதல் - காதிலணிந்த குழைகட்கு விளக்கத்தை நல்கும் ஒளி பொருந்திய நெற்றியையும்; பொன்னின் இழைக்கு விளக்காகிய (மேனி) - தானணிந்த பொன்னாற் செய்த இழைகட்கு விளக்கந் தரும் மேனியையும்; அவ் வாங்கு உந்தி அழகிய வளைந்த உந்தியையு முடைய; தொல் நிகர் நின் செல்வி பழைய பெருமனையிடத்தே யுள்ளவளாகிய நின் பெருந்தேவி; விசும்பு வழங்கு மகளி ருள்ளும் - விண்ணுலகத்தே இயங்கும் மகளி ருள்ளே; சிறந்த - சிறந்தவளான; செம் மீன் அனையள் - சிவந்த விண் மீனாகிய அருந்ததி போன்றவளாவாள் எ - று. குழலும் கற்பும் நுதலும் மேனியும் உந்தியுமுடைய செல்வி என்க. மனையறத்திற்குரிய அறம் பலவும் கற்றுத் தெளிந்த அறிவும் செயலுமுடைய ளென்பது தோன்ற, “அறஞ்சால் கற்பு” என்றார். நுதல் குழைக்கு விளக்கம் தருமெனவே, இழைக்கு விளக்கம் தருவது மேனியாதல் பெற்றாம். நுதல் குழைக்கு விளக்கம் தருதலை, “குழை விளங்காய் நுதல்” (குறுந். 34) என்று பிறரும் கூறுதல் காண்க. சிவந்த ஒளியுடைத் தாதலின், அருந்ததி மீன் செம்மீன் எனப்பட்டது. நீ வண்டன் அனையை; நின் மனைவி அருந்ததியனையள் என்றா ராயிற்று. 29 - 33. நிலனதிர்பு...............கொள்ளுநர். உரை : வியன் பணை - நினது பெரிய முரசு; நிலன் அதிர்பு இரங்கல வாகி - நிலத்தவர் கேட்டு வறிதே மனம் நடுங்குமாறு முழங்காது; வலன் ஏர்பு முழங்கும் - வெற்றி மிகுதி குறித்தெழுந்து முழங்கும்; வேல் மூசு அழுவத்து - வேற்படை நெருங்கிய போர்க்களத்தில்; அடங்கிய புடையல் - அடக்கமாகத் தொடுக்கப்பட்ட பனை மாலையும்; பொலங் கழல் நோன்றாள் - |