பொற்கழல் அணிந்த வலிய தாள்களையுமுடைய; நின் மறப்படை கொள்ளுநர் - நின்னுடைய மறம் மிக்க தானைக்குத் தலைமைகொள்ளும் வீரர்; ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ - நின் போர்வன்மை நினைந்து அஞ்சி யடங்கி யொழுகா தெழும் பகைவர் தம் ஊக்கம் கெட்டழியுமாறு படைகளைச் செலுத்தி; புறக் கொடை எறியார் - ஆற்றாமையால் அப் பகைவர் புறங்கொடுத் தோடுங்கால் அவர்மேல் தம் வேல் முதலிய படைகளை எறிவது இலர் எ - று. நின் முரசின் முழக்கம் கேட்டவழி நிலத்து வாழும் மக்களனைவர்க்கும் பேரச்சம் உண்டாதல் கண்டு, போரிடை யன்றிப் பிறவிடத்து முழங்கா தாயிற் றென்பார், “வியன்பணை, நிலனதிர் பிரங்கல வாகி வலனேர்பு முழங்கும்” என்றார். எனவே, சேரனுடைய முரசுகளுள், போர் முரசுகள் போர் குறித்தன்றி வறிது முழங்கா என்றும், பிற மண முரசும் கொடை முரசுமே எக்காலத்தும் முழங்கு மென்றும் கூறியவாறாயிற்று. செயவெனெச்சம் அதிர்பெனத் திரிந்து நின்றது. பழையவுரைகாரரும் “நிலனதிர வெனத் திரிக்க” என்பர். புடையலும் நோன்றாளு முடைய கொள்ளுநர் என்க. கோடற்குரிய தலைமைப் பொருள் அவாய் நிலையால் வருவிக்கப்பட்டது. “பகைவர்க்குச் சூர் நிகழ்ந்தற்று நின்தானை” (34-5) என்கின்றா ராகலின், கொள்ளுநர் என்றது தானைத் தலைவரை யென்றாயிற்று. “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்களில்வழியில்” (குறள். 770) என்ப வாகலின், மறப்படைக்குத் தலைவரை விதந்தோதினார். தலைவர் இயல்பு கூறவே, அவர்வழி நிற்கும் மறவர் இயல்பு கூறவேண்டாவாயிற்று. உடைய தம் வலி அறியாது ஊக்கமே பொருளாக எழுந்த பகைவரை, “ஒடுங்காத் தெவ்வர்” என்றும், அவர்தாம் ஊக்கமழிந்தவழிநடுங்கி யொடுங்குதல் ஒருதலையாதலின், ஊக்கறக் கடைஇ” என்றும், ஊக்கமிழந்து நடுங்கி யோடுவார்மேல், மேற்கொண்ட சினம் தணியாது படை யெறிவது கழிதறுகண்மை யென்னும் குற்றமாதலின், “புறக் கொடை யெறியார்” என்றும் கூறினார். “சினனே காமம் கழிகண்ணோட்டம், அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவுமிவ்வுலகத், தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந் தீது” (பதிற். 22) எனச் சான்றோர் கூறுதல் காண்க 34 - 36. நகைவர்க்கு.........பலவே. உரை : நின் தானை - நின் படைவீரர்; நகைவர்க்கு அரணமாகி - தம்பால் அன்பும் நட்பு முடையார்க்குப் பாதுகாப்பாளராகி; பகைவர்க்குச் சூர் நிகழ்ந் தற்று - பகைவர்க்கு அச்சஞ் செய்யுந் தெய்வந் தோன்றி வருத்தினாற் போல வுளர்; போர் மிகு குருசில் நீ - போரிலே வெற்றி மிகும் குரிசிலாகிய நீ; பல மாண்டனை - இவ்வாறு பலவகையாலும் மாட்சியெய்தியுள்ளாய் எ - று. நட்பும் அன்பும் கொண்டு இனிய உவகையைச் செய்யும் மக்கள் பலரையும் நகைவர் என்றார். இத் துறையில் சிறப்புடைய பாணர் கூத்தர் புலவர் முதலிய பலரும் அடங்குவர். பிறாண்டும், “நகைவ ரார நன்கலம் வீசி” |