தெளிந்து தம்முடைய சால்பினால் திருவீற்றிருக்கும் அவன் மார்பிற் சார்ந்து பெறும் துயிலினையே மேன்மேலும் விரும்புகின்றார்கள். அவர்தம் காதற்சிறப்பினைக் கூறுதல் பற்றி இப்பாடல் துயிலின்பாயல் எனப் பெயர்பெறுவதாயிற்று என, இவ்வாசிரியர் கூறும் மற்றொரு நயம் (பக். 42) அறிஞர்கள் படித்து இன்புறுதற் குரியதாகும். பாட்டுடைத் தலைவனுடைய பண்புகளுடன் அவனைப்பாடிய புலவரது உள்ளத்துணர்ச்சிகளையும் விரித்துரைக்கும் முறையில் இவ்வுரை அமைந்துளது. 19-ஆம் பாடல் பகைமேற் சென்ற சேரலாதனை நோக்கி அவனை இன்றியமையாப் பெருங்காதலளாகிய கோப்பெருந்தேவியின் பிரிவாற்றாமையை எடுத்துரைத்து அவனுள்ளத்தில் அன்புடைமையைக் கிளர்ந்தெழச் செய்த இயல்பினையும் சேரலாதனது போரினால் பகைவர் நாடழிந்த துன்ப நிலையை எடுத்துரைக்கு முகத்தால் அவன் மனதில் பகைவர்பால் அருளுணர்வினைத் தோற்றுவிக்கும் இயல்பினையும் இனிது புலப்படுத்துவதாம். இப்பாடலுக்கு அமைந்த விரிவுரை ஆசிரியர் குமட்டூர்க்கண்ணனாரின் உள்ளத்திற் பொங்கி யெழுந்த அருளுணர்வினை நன்கு தெருட்டுவதாகும் (பக். 49-56). 20-ஆம் பாடலில் சேரலாதனைப் பெற்ற தாய்வயிறு விளங்குவாளாக எனப் புலவர் வாழ்த்தியதன் நுட்பம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. (பக்கம் 63-4). இப்பாட்டில் ‘வயிறு பசிகூர ஈயலன்’ எனவருந் தொடர்க்குத் “தன்னைச் சார்ந்தார் வயிறு பசி மிகும்படி ஈயாமல் இரான்” எனக் குறிப்புரை வரைந்தாரும் உளர். ஈயலன் என்னும் சொல் ஈதலைச்செய்யான் எனப் பொருள் தருவதன்றி ஈயாமல் இரான் எனப் பொருள் தருதல் கூடாது. வயிறு பசிகூர ஈயலன் என்பதற்கு வயிற்றிற் பசித்தீ மிக்கெழும்படி ஈதலைச் செய்யான் என்பதே நேர்பொருளாகும். வயிற்றிற் பசி மிக்கு எழுமாறு ஈதல் என்றது, இரவலர்க்குக் குறையக் கொடுத்தலை; குறையக் கொடுத்தலைச் செய்யான் என எதிர்மறைமுகத்தாற் கூறவே, இரவலர் பசி தணிய நிறையக் கொடுப்பன் என வற்புறுத்தவா றாயிற்று. “நிறையக் கொடுக்குமாறு தோன்ற ‘வயிறு பசிகூர ஈயலன்’ என்றான்” என இவ் விரிவுரையாசிரியர் கூறும் விளக்கம். இத்தொடரின் பொருளைத் தெளிவுபடுத்தல் காணலாம். 22-ஆம் பாடலில் கயிறு குறுமுகவை என்பதற்கு இவ்விரிவுரையாசிரியர் கூறும் விளக்கம் (பக்கம் 80-1) இதுகாறும் பிறராற் சொல்லப்படாத புதுமையும் தெளிவும் உடையதாகும். நான்காம் பத்தினாற் பாடப் பெற்ற அரசன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆவான். அவன் அப்பெயருடையனாய் விளங்குதற்குத் தன் |